கட்சி உறுப்பினர்களுக்காக மட்டுமல்ல நாட்டிற்காகவும் காங்கிரஸ் புத்துயிர் பெறுவது முக்கியம்... சோனியா காந்தி

 
சோனியா காந்தி

கட்சி உறுப்பினர்களுக்காக மட்டுமல்ல நாட்டிற்காகவும் காங்கிரஸ் புத்துயிர் பெறுவது முக்கியம் என சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸின் நாடாளுமன்ற கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில் கூறியதாவது: முன்னெப்போதையம் விட தற்போது காங்கிரஸின் முன்னோக்கி செல்லும் பாதை மிகவும் சவாலானது. காங்கிரஸ் அமைப்பின் (கட்சி) அனைத்து மட்டங்களிலும் ஒற்றுமை மிக முக்கியமானது. அதை உறுதிப்படுத்த தேவையான அனைத்தையும் செய்ய நான் உறுதியாக இருக்கிறேன். 

காங்கிரஸ்

கட்சி உறுப்பினர்களுக்காக  மட்டுமல்ல நாட்டிற்காகவும் காங்கிரஸ் புத்துயிர் பெறுவது முக்கியம். காங்கிரஸின் மறுமலர்ச்சி நமக்கு மட்டும் முக்கியமான விஷயமல்ல, நமது ஜனநாயகம் மற்றும் சமூகத்திற்கும் அவசியம். பா.ஜ.க. நாட்டில் பிளவுப்படுத்தும் செயல் திட்டத்தை தூண்டுகிறது. பா.ஜ.க.வின் பிளவுப்படுத்தும் செயல்திட்டம் மாநிலங்களில் அரசியல் விவாதங்களில் வழக்கமான அம்சமாகும். 

பா.ஜ.க.

பா.ஜ.க.வின் செயல்திட்டத்துக்கு எரிபொருள் சேர்க்கும் வகையில் வரலாறு தவறாக திரிக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக நமது பன்முகத்தன்மை கொண்ட சமுதாயத்தை நிலைநிறுத்தி வளப்படுத்திய நட்பு மற்றும் நல்லிணக்கத்தின் பிணைப்பை பா.ஜ.க. சேதப்படுத்த காங்கிரஸ் அனுமதிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.