அதிமுக சண்டையில் முதல்வர் ஸ்டாலின் முடிவெடுக்க கோரும் ஓபிஎஸ் மகன்
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலையிட்டு முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் எம்.பி.
பொதுக்குழுவில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் தமிழக காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும் என்றுதான் என்று அவர் கோரிக்கை வைத்திருக்கிறார் .
அதிமுகவின் பொதுக்குழு நாளை மறுநாள் கூடவிருக்கும் நிலையில் பொதுக்குழுவினை எப்படியாது தள்ளிப்போட வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் முயன்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ. பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும் தேனி தொகுதி எம்பியுமான ஓபி ரவீந்திரநாத் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, பொதுக்குழுவை நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து மூன்று தரப்பினர் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
அதாவது, பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் முடிவு எடுத்திருக்கிறார். தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு ஒரு முடிவு எடுக்க வேண்டும் . பொதுக்குழுவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் தமிழக காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும் என்றார். நீதிமன்றத்தினை நாடுவது பற்றி சட்ட வல்லுனர்களும் முடிவெடுத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
அதிமுகவில் பன்னீர்செல்வத்தை ஓரங்கட்ட முயற்சிகள் நடந்து வருவதாக வரும் தகவல்கள் குறித்த கேள்விக்கு, யாரும் ஓரங்கட்ட முடியாது என்று தெரிவித்து இருக்கிறார். பொதுக்குழு நடக்குமா என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்கிறார். ஓபிஎஸ் பின்னணியில் சசிகலா இருப்பதாக சொல்லப்படும் அதிமுகவினரின் குற்றச்சாட்டுக்கு, அது ஆதாரமில்லாத தகவல் என்று தெரிவித்திருக்கிறார்.