தோல்வி பயம் அகிலேஷ் யாதவை தனது சித்தப்பாவை நினைத்து பார்க்க வைத்தது.. பா.ஜ.க. கிண்டல்

 
சிவ்பால், அகிலேஷ், டிம்பிள்

அகிலேஷ் யாதவ்-சிவ்பால் சிங் யாதவ் சந்திப்பை குறிப்பிட்டு, தேர்தல் தோல்வி பயம் அகிலேஷ் யாதவை தனது சித்தப்பாவை நினைத்து பார்க்க வைத்தது என்று பா.ஜ.க.வின் சித்தார்த் நாத் சிங் தெரிவித்தார்.


உத்தர பிரதேசம் மாநிலம் மெயின்புரி மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்த  சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் கடந்த அக்டோபர் 10ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதி காலியானது. இதனையடுத்து அந்த தொகுதிக்கு டிசம்பர் 5ம் தேதியன்று இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக மறைந்த முலாயம் சிங் யாதவின் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் போட்டியிடுகிறார்.

டிம்பிள் யாதவ்

மெயின்புரி மக்களவை தொகுதி சமாஜ்வாடி கட்சியின் கோட்டையாக கருதப்பட்டாலும், ஆளும் கட்சியான பா.ஜ.க.வின் வேட்பாளர் டிம்பிள் யாதவுக்கு பெரும் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அகிலேஷ் யாதவ், டிம்பிள் யாதவின் வெற்றிக்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக தனது சித்தப்பாவும், பி.எஸ்.பி.எல். கட்சி தலைவருமான சிவ்பால் சிங் யாதவுடன் மனகசப்பில் இருந்த அகிலேஷ் யாதவ் திடீரென சைபியில் உள்ள சிவ்பால் சிங் யாதவ் வீட்டுக்கு தனது மனைவியுடன் சென்று அவரை  சந்தித்து பேசினார். அப்போது டிம்பிள் யாதவுக்கு ஆதரவு அளிக்கும்படி தனது சித்தப்பா சிவ்பால் சிங் யாதவிடம் அகிலேஷ் யாதவ் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது.

சித்தார்த் நாத் சிங்

இந்த சந்திப்புக்கு பிறகு அகிலேஷ் யாதவ் டிவிட்டரில், சிவ்பால் சிங் யாதவை சந்தித்தது தொடர்பான புகைப்படத்தை ஷேர் செய்து, நேதாஜி மற்றும் குடும்பத்தின் பெரியவர்களின் ஆசிர்வாதத்துடன் மெயின்புரி மக்களும் எங்களுடன் உள்ளனர் என பதிவு செய்து இருந்தார். அகிலேஷ் யாதவ்- சிவ்பால் சிங் யாதவ் சந்திப்பை பா.ஜ.க. கிண்டல் செய்துள்ளது. பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சித்தார்த் நாத் சிங் டிவிட்டரில், தேர்தல் காரணமாக அகிலேஷ் ஜி தனது சித்தப்பாவை நினைவு கூர்ந்தார், இது தோல்வி பயம் என்று அழைக்கப்படுகிறது என பதிவு செய்துள்ளார்.