அரசாங்கத்தை நடத்த முடியாவிட்டால் ராஜினாமா செய்துவிட்டு போய் விடுங்கள்.. கர்நாடக முதல்வரை வலியுறுத்திய காங்கிரஸ்

 
அப்படியே ‘ஆபரேஷன் லோட்டஸ்’ குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு போடுங்க.. எடியூரப்பாவை நக்கல் செய்த சித்தராமையா…..

கர்நாடகாவில் அடுத்தடுத்து 2 கொலைகள் நடந்திருப்பதை குறிப்பிட்டு, அரசாங்கத்தை நடத்த முடியாவிட்டால் ராஜினாமா செய்து விட்டு போய் விடுங்கள் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையை சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பா.ஜ.க.வின் இளைஞர் பிரிவு மாவட்ட செயலாளராக இருந்தவர்  பிரவீன் நெட்டாரு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று மங்களூருவின் புறநகர் பகுதியில் 23 வயது இளைஞர் பாசில் என்பவரை மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தனர். இந்த கொலைகள் கர்நாடகாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரவீன் நெட்டாரு

அடுத்தடுத்து கொலைகள் நடந்துள்ளது குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், சித்தராமையா காலத்திலும் கொலைகள் நடந்தன என தெரிவித்தார். முதல்வர் பசவராஜ் பொம்மையின் இந்த கருத்துக்கு சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா சித்தராமையா கூறியதாவது: விரக்தியில் முதல்வர் அறிக்கை வெளியிடுகிறார். உங்களால் அரசாங்கத்தை நடத்த முடியாவிட்டால், அதை விடுங்கள். 

பசவராஜ் பொம்மை

எதிர்க்கட்சிகளின் பேச்சை கேட்க முடியாவிட்டால் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு போய்விடுங்கள். கொலை வழக்குகளில் எஸ்.டி.பி.ஐ. மற்றும் பி.எப்.ஐ.க்கு தொடர்பு இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.டி.பி.ஐ. மற்றும் பி.எப்.ஐ. அமைப்புகள் சட்டத்தை மீறியிருந்தால் அதற்கான ஆதாரம் இருந்தால் அவற்றை அரசு தடை செய்யட்டும். இந்த அரசாங்கத்துக்கு (பொம்மை தலைமையிலான பா.ஜ.க. அரசு) எந்த தார்மீகமும் இல்லை. ஒழுக்கம் இல்லாதவர்கள் எப்படி இந்த வழக்ககுகளின் தார்மீகப் பொறுப்பை ஏற்க முடியும்?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.