காவி கொடி தேசியக் கொடியாக மாறலாம் என்ற பா.ஜ.க. அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு.. சித்தராமையா வலியுறுத்தல்

 
காவி கொடி

நூறு அல்லது ஐநூறு ஆண்டுகளுக்கு பிறகு காவிக்கொடி தேசியக் கொடியாக மாறலாம் என்று கூறிய கர்நாடக அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸின் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

ஷிவமோகாவில் தேசியகொடி கம்பத்தில் காவிக் கொடி ஏற்றப்பட்ட சர்ச்சை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா பதிலளிக்கையில், இனி நூறு அல்லது ஐநூறு ஆண்டுகளுக்கு பிறகு காவிக்கொடி தேசியக் கொடியாக மாறலாம். எல்லாவற்றிற்கும் மேலாக ராமர் மற்றும் அனுமந்தரின் தேர்களில் பறந்தது காவிக்கொடி. எவ்வாறாயினும், மூவர்ணக் கொடியே தேசிய கொடி, அதை மதிக்காத எவரும் துரோகி என்று தெரிவித்தார்.

கே.எஸ்.ஈஸ்வரப்பா

கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா காவி கொடி தேசிய கொடியாக மாறலாம் என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமைச்சர் ஈஸ்வரப்பா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்கட்சி தலைவருமான சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

சித்தராமையா

இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில், செங்கோட்டையில் காவி கொடி ஏறலாம் என்று கூறியதற்காக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும். செங்கோட்டையில் காவி கொடி ஏறும் என்று கூறியபிறகு அமைச்சராக தொடர அவருக்கு (கே.எஸ்.ஈஸ்வரப்பா) உரிமை இல்லை, அமைச்சரவையிலிருந்து அவரை முதல்வர் (பசவராஜ் பொம்மை) நீக்க வேண்டும். செங்கோட்டையில் கொடி ஏற்றியதற்காக விவசாயிகள் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஈஸ்வரப்பா மீதும் இதே போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.