அகிலேஷ் யாதவுக்கு அரசியல் முதிர்ச்சி இல்லாததால், சமாஜ்வாடி கட்சி பலவீனமடைந்து வருகிறது.. சித்தப்பா குற்றச்சாட்டு

 
அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவுக்கு அரசியல் முதிர்ச்சி இல்லாததால், சமாஜ்வாடி கட்சி பலவீனமடைந்து வருகிறது என்று அவரது சித்தப்பா சிவ்பால் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சமாஜ்வாடி கட்சியில் அகிலேஷ் யாதவுக்கும், அவரது சித்தப்பா சிவ்பால் யாதவுக்கும் இடையே அதிகார போட்டி ஏற்பட்டது. இதன் விளைவாக சிவ்பால் யாதவ் சமாஜ்வாடியிலிருந்து விலகி பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோஹியா)  (பி.எஸ்.எல்.பி.) தொடங்கினார். இருப்பினும் கடந்த உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கூட்டணியில் பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோஹியா) இணைந்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் சிவ்பால் யாதவ்  சமாஜ்வாடி கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். இருப்பினும் அகிலேஷ் யாதவுக்கும், சிவ்பால் யாதவுக்கும் இடையே மனகசப்பு இருந்து வந்தது.

சிவ்பால் யாதவ்

இந்நிலையில்,அகிலேஷ் யாதவுக்கு அரசியல் முதிர்ச்சி இல்லாததால் சமாஜ்வாடி கட்சி வீழ்ச்சி கண்டு வருவதாக சிவ்பால் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். சிவ்பால் யாதவ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அகிலேஷ் யாதவுக்கு அரசியல் முதிர்ச்சி இல்லாததால், சமாஜ்வாடி கட்சி பலவீனமடைந்து வருகிறது, பல தலைவர்கள் அந்த கட்சியில் இருந்து விலகுகின்றனர். கட்சி கூட்டங்களுக்கு என்னை அழைப்பது இல்லை, எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுடனான சந்திப்புக்கு கூட எனக்கு அழைப்பு இல்லை.

சமாஜ்வாடி

அகிலேஷ் யாதவ் எனது பரிந்துரைகளை தீவிரமாக எடுத்துக் கொண்டால், உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் நிலை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். சமாஜ்வாடி கட்சியின் கூட்டணிகள் இப்போது அவர்களை விட்டு வெளியேறுகின்றன, அதற்கு காரணம் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின்  அரசியல் முதிர்ச்சியின்மைதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.