என்னை பா.ஜ.க.வுக்கு அனுப்ப விரும்பினால் என்னை கட்சியிலிருந்து நீக்குங்க.. அகிலேஷுக்கு பதிலடி கொடுத்த சித்தப்பா..

 
சிவ்பால் யாதவ்

நான் பா.ஜ.க.வில் சேர வேண்டும் என நீங்கள் விரும்பினால் என்னை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என அகிலேஷ் யாதவுக்கு அவரது சித்தப்பா சிவ்பால் யாதவ் பதிலடி கொடுத்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சமாஜ்வாடி கட்சியில் அகிலேஷ் யாதவுக்கும், அவரது சித்தப்பா சிவ்பால் யாதவுக்கும் இடையே அதிகார போட்டி ஏற்பட்டது. இதன் விளைவாக சிவ்பால் யாதவ் சமாஜ்வாடியிலிருந்து விலகி பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோஹியா)  (பி.எஸ்.எல்.பி.) தொடங்கினார். இருப்பினும் கடந்த உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கூட்டணியில் பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோஹியா) இணைந்து போட்டியிட்டது.  அந்த தேர்தலில் சிவ்பால் யாதவ்  சமாஜ்வாடி கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். 

அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேச சட்டப்பேரவையில் பதவியேற்றுக் கொண்ட பிறகு அவர் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சிவ்பால் சமாஜ்வாடி கூட்டணியிலிருந்து வெளியேறி பா.ஜ.க.வில் இணையலாம் என பேசப்பட்டது. அகிலேஷ் யாதவும் தனது சித்தப்பா சிவ்பால் யாதவ் பா.ஜ.க.வில் இணைந்து விடுவார் என்ற எண்ணத்தில் அவரை மறைமுகமாக தவிர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அகிலேஷ் யாதவ், எனது சித்தப்பா சிவ்பால் யாதவை கட்சியில் சேர்க்க பா.ஜ.க. ஏன் தாமதப்படுத்துகிறது என கேள்வி எழுப்பினார். இதற்கு சிவ்பால் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.

பா.ஜ.க.

அகிலேஷ் யாதவின் சித்தப்பா சிவ்பால் யாதவ் இது தொடர்பாக கூறுகையில், இது ஒரு பொறுப்பற்ற மற்றும் குழந்தைத்தனமான அறிக்கை. அண்மையில் நடந்து முடிந்த உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற 111 சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க்களில் நானும் ஒருவன். அவர் (அகிலேஷ் யாதவ்) என்னை பா.ஜ.க.வுக்கு அனுப்ப விரும்பினால், அவர் என்னை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்தார்.