தைரியம் இருந்தால் என்னை கட்சியிலிருந்து நீக்கட்டும்.. அகிலேஷ் யாதவுக்கு சவால் விடுத்த சித்தப்பா

 
சிவ்பால் யாதவ்

அகிலேஷ் யாதவுக்கு தைரியம் இருந்தால் சட்டப்பேரவை சமாஜ்வாடி கட்சியிலிருந்து என்னை நீக்கட்டும் என அவரது சித்தப்பா சிவ்பால் யாதவ் சவால் விடுத்துள்ளார்

2017ம் ஆண்டில் சமாஜ்வாடி கட்சியில் அகிலேஷ் யாதவுக்கும், அவரது சித்தப்பா சிவ்பால் யாதவுக்கும் இடையே அதிகார போட்டி ஏற்பட்டது. சமாஜ்வாடி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் ஆனவுடன் அவர்கள் இருவர்களுக்கு இடையிலான உறவு மோசமடைந்தது. சிவ்பால் யாதவ் சமாஜ்வாடியிலிருந்து விலகி பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோஹியா)  (பி.எஸ்.எல்.பி.) தொடங்கினார். இந்நிலையில், கடந்த உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கூட்டணியில் பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோஹியா) இணைந்து போட்டியிட்டது. 

பா.ஜ.க.

அந்த தேர்தலில் சிவ்பால் யாதவ்  சமாஜ்வாடி கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். உத்தர பிரதேச சட்டப்பேரவையில் பதவியேற்றுக் கொண்ட பிறகு அவர் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த  சந்திப்பு தொடர்பாக சிவ்பால் யாதவ் கூறுகையில், மிக விரைவில், எல்லாவற்றையும் பற்றி பேசி அனைத்தையும் கூறுவேன் என்று தெரிவித்தார். சிவ்பால் யாதவ் பொடி வைத்து பேசியது பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது. சிவ்பால் சமாஜ்வாடி கூட்டணியிலிருந்து வெளியேறி பா.ஜ.க.வில் இணையலாம் என பேசப்பட்டது. 

அகிலேஷ் யாதவ்

இந்நிலையில், சமாஜ்வாடி  சட்டப்பேரவை கட்சியிலிருந்து சிவ்பால் யாதவை நீக்க அகிலேஷ் யாதவ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு சிவ்பால் யாதவ், தைரியம் இருந்தால் என்னை நீக்கட்டும் என்று அகிலேஷ் யாதவுக்கு சவால் விடுத்துள்ளார். சிவ்பால் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் பா.ஜ.க. தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாக கருதுவதால், என்னை சட்டப்பேரவை கட்சியிலிருந்து நீக்க சமாஜ்வாடி கட்சி தலைவர் (அகிலேஷ் யாதவ்) சுதந்திரமாக இருக்கிறார். முடிந்தால் எனக்கு எதிராக அவர் நடவடிக்கை எடுக்கட்டும். சமாஜ்வாடி கட்சியின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 111 சட்டப்பேரவை உறுப்பினர்களில் நானும் ஒருவன். பா.ஜ.க.வுடன் நான் தொடர்பில் இருந்தால் என்னை வெளியேற்ற அகிலேஷ் யாதவுக்கு எல்லா உரிமையும் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.