ஷிண்டேவை ஒதுக்கி வைத்தால் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க தயாராக இருந்த உத்தவ் தாக்கரே.. சிவ சேனா எம்.எல்.ஏ. பகீர் தகவல்

 
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும்…..கொந்தளித்த சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே! சூடு பிடிக்கும் ஆரே விவகாரம்

ஏக்நாத் ஷிண்டேவை ஒதுக்கி வைத்தால் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க உத்தவ் தாக்கரே தயாராக இருந்தார் என்று சிவ சேனா கிளர்ச்சி எம்.எல்.ஏ. தீபக் கேசர்கர் தெரிவித்தார்.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா பிரிவின் செய்திதொடர்பாளரும், கிளர்ச்சி எம்.எல்.ஏ.வுமான தீபக் கேசர்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: சிவ சேனாவில் நம்பர் 2 தலைவராக ஏக்நாத் ஷிண்டே இருந்ததால் அவரை சந்திப்பேன். உத்தவ் தாக்கரேவை சந்திக்கும் போதெல்லாம் பா.ஜ.க.வுடனான பழைய உறவை மீண்டும் தொடர வேண்டும் என்று அவரிடம் கூறுவதாக ஷிண்டே கூறினார். ஆனால் அது நடக்கவில்லை, சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் கூட்டணியிலிருந்து ஷிண்டே வெளியேறினார். 

தீபக் கேசர்கர்

நான் அங்கு இல்லாதபோதும், உத்தவ் சாகேப்பை சந்தித்து அவர் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்து, அவருக்கு எல்லா வழிகளிலும் உதவுமாறு எனது உதவியாளர்களிடம் கூறினேன். ஏக்நாத் ஷிண்டேவை ஒதுக்கி வைத்தால் (பா.ஜ.க.வுடன் கூட்டணி) ஒன்று சேருவோம் என்று உத்தவ் தாக்கரே கருதியதை அவர்கள் கண்டுபிடித்தனர். இதற்கு பா.ஜ.க.வோ அல்லது எங்கள் எம்.எல்.ஏ.க்களோ சம்மதித்திருக்க மாட்டார்கள். எனவே அது மேலும் செல்லவில்லை. 

ஏக்நாத் ஷிண்டே

எனவே நான் அவரிடம் (உத்தவ் தாக்கரே) கேட்க விரும்புகிறேன், நீங்கள் அவர்களிடம் (பா.ஜ.க.) செல்லப் போகிறீர்கள் என்றால், ஏக்நாத் ஷிண்டே அவர்களுடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு இப்போது என்ன ஆப்சேபனைஇருக்கிறது?. உத்தவ் தாக்கரே அவருக்கு  ஆசிர்வாதங்களை  வழங்க வேண்டும், அதில் எந்த தவறும் இல்லை. உங்களுக்கும் அதே சித்தாந்தம் உள்ளது, மகாராஷ்டிராவின் நலன் மற்றும் தேசத்தின் நலனுக்காக நீங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.