ரானா தம்பதியை பயன்படுத்தி மும்பையின் அமைதியை சீர்குலைக்க பா.ஜ.க. திட்டம்.. சிவ சேனா குற்றச்சாட்டு

 
சிவ சேனா

எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.வான ரானா தம்பதியை பயன்படுத்தி மும்பையின் அமைதியை சீர்குலைக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது என சிவ சேனா குற்றம் சாட்டியுள்ளது.

அமராவதி மக்களை தொகுதி உறுப்பினர் நவ்னீத் ரானாவும், அவருடைய கணவரும், சுயேட்சை எம்.எல்.ஏ.வுமான ரவி ரானாவும், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பு ஹனுமன் சாலீசா பாடப்போவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தனர். ஆனால் பின்னர்  மும்பை நடக்கும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதால், இந்த சூழ்நிலையில் சட்டம் ஒழங்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக முதல்வர் வீடு முன்பு ஹனுமன் சாலிசா பாடுவதை கைவிடுவதாக நவ்னீத் ரானா தம்பதியினர் அறிவித்தனர். இருப்பினும், சிவ சேனா கட்சியினர் மத நம்பிக்கையை புண்படுத்தியதாக அளித்த புகாரின் அடிப்படையில், ரானா தம்பதியினரை மும்பை  போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ரானா தம்பதியினரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது அவர்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர். 

 ரவி ரானா மற்றும் நவ்னீத் ரானா

இந்நிலையில், ரானா தம்பதியினர் ஹனுமன் கீர்த்தனை பாட போவதாக அறிவித்தன் பின்னணியில் பா.ஜ.க. உள்ளது என சிவ சேனா குற்றம் சாட்டியுள்ளது.  சிவ சேனாவின் அரசியல் ஊதுகுழலான சாம்னா பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்துததுவா என்ற பெயரில் பா.ஜ.க. சமீபத்தில் கிளப்பிய சலசலப்பை ஆதரிக்க முடியாது. இதன் பின்னணியில் பா.ஜ.க. உள்ளது. மும்பையின் அமைதியை கெடுக்க அவர்கள் ரானா ஜோடியை வைத்து திட்டமிட்டு எல்லாம் நடந்தது. அவர்களின் அறிவுறுத்தல்கள் சிவ சேனா தொண்டர்களை கோபப்படுத்தியது மற்றும் தம்பதியினர் தங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த ஜோடியின் கருத்தியல் தொடர்புகள் குறித்து எந்த உத்தரவாதமும் இல்லை. 

பா.ஜ.க.

நாடாளுமன்றத்தில் ராமர் பெயரில் சத்தியப் பிரமாணம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்த்த எம்.பி. நவ்னீத் ரானா, அனுமன் கீர்த்தனை மற்றும் இந்துத்துவா போன்ற பிரச்சினைகளில் இன்று பா.ஜ.க.வின் கட்டளைப்படி நடனமாடுவது ஆச்சரியமாக இருக்கிறது. மக்களவை தேர்தலில் அமராவதி தொகுதியில் போலி ஜாதி சான்றிதழின் அடிப்படையில் போட்டியிட்டார். நவ்னீத் கவுர் ரானா மற்றும் அவரது தந்தை ஹர்பஜன் சிங் குண்ட்லெஸ்  ஆகியோர் ஜாதி சான்றிதழ் பெறுவதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்தனர். அமராவதி மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதால், அந்த தொகுதியில் போட்டியிட ரானா போலி ஜாதி சான்றிதழ் பெற்றுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.