காங்கிரஸின் தட்டில் சாப்பிட்டு விட்டு ஏப்பம் விடும் தலைவர்கள் தோல்விக்காக புலம்புகிறார்கள்... ஜி23 தலைவர்களை சாடிய சிவ சேனா

 
சிவ சேனா

காங்கிரஸின் தட்டு மற்றும் கிண்ணத்தில் இருந்து சாப்பிட்டு விட்டு, குடித்து விட்டு ஏப்பம் விடும் தலைவர்கள் காங்கிரஸின் தோல்விக்காக புலம்புகிறார்கள் என்று காங்கிரஸின் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட ஜி23 தலைவர்களை சிவ சேனா சாடியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கபில் சிபல், குலாம் நபி ஆசாத் மற்றும் மணிஷ் திவாரி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 23 பேர் (ஜி23), காங்கிரஸின் மறுமலர்ச்சிக்கு  கட்சிக்கு முழுநேர தலைவர் அவசியம் என்றும், கட்சி அமைப்பில் சீர்த்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று காங்கிரஸின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். தற்போது நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இதனையடுத்து ஜி23 தலைவர்கள் மீண்டும் சந்தித்து அடுத்த நடவடிக்கை எடுதது ஆலோசனை நடத்தினர்.

குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்க காந்தி குடும்பம் கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று ஜி23 தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், காந்திக்கு குடும்பத்துக்கு சிவ சேனா ஆதரவாக குரல் கொடுத்துள்ளது. மேலும், ஜி23 தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. சிவ சேனாவின் அரசியல் ஊதுகுழலான சாம்னா பத்திரிகையில் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: காங்கிரஸ் கட்சிக்கு இன்று காந்தி குடும்பம் தேவை. காந்திகள் (சோனியா, பிரியங்கா, ராகுல்) தலைமையை துறந்தாலும் பரவாயில்லை, ஆனால் ஜி23ல் காங்கிரஸை முன்னோக்கி அழைத்து சென்று வெற்றி பெறச் செய்யும் தலைவர் இருக்கிறார்களா?.  

காங்கிரஸ்

காங்கிரஸின் தட்டு மற்றும் கிண்ணத்தில் இருந்து சாப்பிட்டு விட்டு, குடித்து விட்டு ஏப்பம் விடும் தலைவர்கள் காங்கிரஸின் தோல்விக்காக புலம்புகிறார்கள். இவர்களில் எத்தனை தலைவர்கள் 5 மாநில தேர்தலுக்கு (பிரச்சாரத்துக்கு) சென்றனர். எத்தனை பேர் உண்மையாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கேப்டன் அமரீந்தர் சிங் காங்கிரஸை விட்டு வெளியேறி தனது சொந்த கட்சியை (பஞ்சாப் லோக் காங்கிரஸ்) தொடங்க முடிவு செய்தபோது, எத்தனை ஜி23 தலைவர்கள் அவரை சமாதானப்படுத்த முன்வந்தனர். காங்கிரஸின் தண்டு காய்ந்து விட்டது, மரம் இலையுதிர்காலமாகவும் மாறி விட்டது. பா.ஜ.க.வுக்கு சவால் விடும் வகையில் புதிய கதையை ராகுல் காந்தி கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.