ராஜ் தாக்கரே ஒரு புதிய இந்து ஓவைசி.. மத மோதலை உருவாக்க அவர் கட்சிக்கு பா.ஜ.க. ஒப்பந்தம் கொடுத்துள்ளது... சஞ்சய் ரவுத்

 
அடுத்த 25 வருஷத்துக்கு சிவ சேனா தலைமையில்தான் ஆட்சி- சஞ்சய் ரவுத் உறுதி

எம்.என்.எஸ். கட்சி தலைவர் ராஜ் தாக்கரே ஒரு புதிய இந்து ஓவைசி, மாநிலத்தில் வகுப்புவாத மோதலை உருவாக்க அவர் கட்சிக்கு பா.ஜ.க. ஒப்பந்தம் கொடுத்துள்ளது என சிவ சேனாவின் சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டினார்.

மகாராஷ்டிராவில் மே 3ம் தேதிக்குள் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் ஹனுமான் பாடல்களை ஒலிபெருக்கிகளில் இசைப்போம். இது ஒரு சமூக பிரச்சினை, மதப் பிரச்சினை அல்ல. மாநில அரசுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். இந்த விஷயத்தில் நாங்கள் பின்வாங்க மாட்டோம். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை செய்யுங்கள் என அண்மையில் மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே அம்மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ராஜ்தாக்கரே

இந்த சூழ்நிலையில், ராஜ் தாக்கரே ஒரு புதிய இந்து ஓவைசி என சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டியுள்ளார். சஞ்சய் ரவுத் கூறியதாவது: மசூதிகளில் ஒலி பெருக்கிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும், அனுமான் பாடல்களை ஒலிப்பதும் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா உடன் இணைந்து பா.ஜ.க.வால் மகா விகாஸ் அகாடி அரசாங்கத்தை கவிழ்க்க வகுப்புவாத வெறுப்பை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும். மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை வெல்வதற்கான (தங்கள் பக்கம் இழுக்கும்) அதன் முயற்சிகள் தோல்வியடைந்ததால் பா.ஜ.க. விரக்தியடைந்துள்ளது.  

பா.ஜ.க.

அதேநேரத்தில் வகுப்புவாத மோதலை உருவாக்கும் முயற்சியை மக்கள் நிராகரித்துள்ளனர். வகுப்புவாத மோதலை உருவாக்க மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சிக்கு பா.ஜ.க. ஒப்பந்தம் கொடுத்துள்ளது. அவர்கள் (எம்.என்.எஸ்.) மசூதிகளுக்கு முன்னால் அனுமான் பாடல்களை பாடுவார்கள். அப்போதுதான் உண்மையான ஓவைசி வருவார். எல்லாமே கலவரமாகி விடும். பின்னர் ராஜ்பவன் மூலம் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். தேர்தல் நடக்கும் மாநிலங்களில் கலவரங்களை உருவாக்கி, இந்த வழியில் வெற்றி பெறுவதுதான் பா.ஜ.க.வின் உத்தியாக இருக்கிறது. இவ்வாறுஅவர் தெரிவித்தார்.