இது இந்திய ஒற்றுமை பயணம் அல்ல குடும்ப ஒற்றுமை பயணம்.. ராகுல் காந்தியை தாக்கிய பா.ஜ.க.

 
ராகுல் காந்தி

ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி தொடங்கியதை குறிப்பிட்டு, இது இந்திய ஒற்றுமை அல்ல குடும்ப ஒற்றுமை பயணம் என்று பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி நேற்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் என்ற நடைபயணத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். இருப்பினும் உண்மையில் இன்று காலை 7 மணிக்குதான் நடைப்பயணம் தொடங்குகிறது. இந்திய ஒற்றுமை பயண திட்டத்தின்படி, ராகுல் காந்தி மொத்தம் 3,500 கி.மீ. தொலைவை 5 மாதங்களில் நிறைவு செய்கிறார். இந்திய ஒற்றுமை பயணம் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கும்.

சர்தார் வல்லபாய் படேல்

ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை நேற்று மாலை கன்னியாகுமரியில் தொடங்குவதற்கு முன்னதாக, நேற்று காலையில் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமரும் அவரது தந்தையுமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார். இதனை பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது. இந்திய ஒற்றுமை பயணத்தை சர்தார் படேலுக்கு அஞ்சலி செலுத்தி தொடங்காமல், தனது குடும்பத்துக்கு அஞ்சலி செலுத்தி ராகுல் காந்தி தொடங்கியுள்ளார் என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

ஷெசாத் பூனவல்லா

பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா டிவிட்டரில், ராகுல் காந்தி மற்றும் முதல் குடும்பம் எப்போதும் சர்தார் படேலை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை நம்புகிறது மற்றும் அவரது முயற்சிகளை ஒரு போதும் கொண்டாடவில்லை. இன்று அவர்களின் இந்திய ஒற்றுமை பயணம் கூட இந்தியாவை உறுதி செய்த சர்தார் படேலுக்கு அஞ்சலி செலுத்துவதில் தொடங்கவில்லை, மாறாக குடும்பத்துக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம் தொடங்குகிறது. இது இந்திய ஒற்றுமை பயணம் அல்ல குடும்ப ஒற்றுமை பயணம் என பதிவு செய்துள்ளார்.