முர்முவை அவமதிக்கும் வகையில் பேசியதற்கு விளக்கம் கொடுங்க அல்லது மன்னிப்பு கேளுங்க.. காங்கிரஸூக்கு பதிலடி கொடுத்த பா.ஜ.க.

 
திரௌபதி முர்மு

குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவை அவமதிக்கும் வகையில் பேசியதற்கு விளக்கம் கொடுங்க அல்லது மன்னிப்பு கேளுங்க என்று காங்கிரஸை பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. 

வரும் திங்கட்கிழமையன்று (18ம் தேதி) குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு களத்தில் உள்ளார். இந்நிலையில், திரௌபதி முர்மு மிகவும் தீய தத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்று காங்கிரஸின் மூத்த தலைவர் அஜோய் குமார் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியது.

அஜோய் குமார்

இதனையடுத்து அஜோய் குமாரின் கருத்துக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா கூறியதாவது: சூழ்நிலையை எதிர்த்து போராடி, அடிமட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, எம்.எல்.ஏ.வாக பணியாற்றி, சிறந்த எம்.எல்.ஏ. விருதை வென்ற, ஊழலின் கறையே இல்லாத ஒருவரை பற்றிய தத்துவத்தில் என்ன கெட்டது, அதில் என்ன தீமை இருக்கிறது?. 

காங்கிரஸ்

அவர் (திரௌபதி முர்மு) ஒரு தீய தத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்றும், அவர் ஆதிவாசி சமூகத்தை அடையாளப்படுத்தவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி குறிப்பாக அஜோய் குமார் பேசிய விதம், திரௌபதி முர்முவை அவமானப்படுத்துவது மட்டுமல்ல, அவரது வாழ்க்கை போராட்டங்கள், அவர் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்த விதம் மற்றும் ஒட்டு மொத்த ஆதிவாசி சமூகத்தையும் அவமதிக்கும் செயல். திரௌபதி முர்முஜியை மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆதிவாசி சமூகத்தையும் அவமதிக்கும் வகையில் பேசியதற்கு காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்க வேண்டும், இல்லையெனில் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.