பா.ஜ.க. கவுன்சிலர்களை விலைக்கு வாங்க அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சிக்கிறார்... ஷெஹ்சாத் பூனவாலா குற்றச்சாட்டு
பா.ஜ.க. கவுன்சிலர்களை விலைக்கு வாங்க அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சிக்கிறார் என்று ஷெஹ்சாத் பூனவாலா குற்றம் சாட்டினார்.
பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவாலா, பா.ஜ.க.வின் ஹரிஷ் குரானா மற்றும் பா.ஜ.க. கவுன்சிலர் மோனிகா பந்த் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது ஆம் ஆத்மி கட்சியில் சேருவதற்காக அந்த கட்சியின் தலைவர் ஷிகா கர்க் தன்னை அணுகியதாக மோனிகா பந்த் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக மோனிகா பந்த் கூறுகையில், ஆம் ஆத்மி கட்சியின் ஷிகா கர்க் என்னை அழைத்து தன்னை சந்திக்கும்படி கூறினார். நான் தொலைப்பேசியில் பேச வற்புறுத்தினேன், ஆனால் ஷிகா கர்க் தன்னை நேரில் சந்திக்க வலியுறுத்தினார். வேலை சம்பந்தமான அழைப்பாக இருக்கலாம் என்று நினைத்தேன்.
ஆனால் அவர் என் வீட்டுக்கு வந்து என்னை ஆம் ஆத்மி கட்சியில் சேரும்படி வற்புறுத்த முயன்றார். மேலும் வேலை தொடர்பான அனைத்து நிதிகளையும் நான் பெறுவேன், அது மட்டுமின்றி மற்ற நிதியும் உங்களுக்கு தரப்படும் என்று கர்க் என்னிடம் தெரிவித்தார். மோனிகா பந்தின் குற்றச்சாட்டை மேற்கோள் காட்டி, ஷெஹ்சாத் பூனவாலா கூறியதாவது: டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க. 104 இடங்களை கைப்பற்றியது. எனவே இப்போது ஆம் ஆத்மி கட்சி பா.ஜ.க. தலைவர்களுக்கு ஆசை காட்டி தனது கட்சியில் சேர்க்க முயற்சி செய்கிறது.
எங்கள் (பா.ஜ.க.) கவுன்சிலர்களை விலைக்கு வாங்க அவர் (அரவிந்த் கெஜ்ரிவால்) முயற்சிக்கிறார். அவர் (கெஜ்ரிவால்) மற்ற மக்கள் மீது ஊழல் குற்றம் சாட்டுகிறார். ஆனால் அவரது கட்சியே மிகவும் ஊழல் நிறைந்த கட்சியாகும். பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி ஒரு கன் சர்க்கார். இதில் ஜி என்பது கேங்ஸ்டர், யு என்றால் உக்ரவாதி (தீவிரவாதிகள்) மற்றும் என் என்பது நாஷா மாபியா (போதை மருந்து மாபியா). ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்ததில் இருந்து பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.