இந்தியாவை ஒருங்கிணைக்க கூடிய கட்சி காங்கிரஸ் என்பது இந்திய ஒற்றுமை பயணத்தின் செய்தி.. சசி தரூர்

 
சசி தரூர்

இந்தியாவை ஒருங்கிணைக்க கூடிய கட்சி காங்கிரஸ் என்பது இந்திய ஒற்றுமை பயணத்தின் செய்தி என்று சசி தரூர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:  இந்தியாவை ஒருங்கிணைக்க கூடிய கட்சி காங்கிரஸ் என்பது இந்திய ஒற்றுமை பயணத்தின் செய்தி.  பொதுமக்கள் இந்த செய்தியால் போதுமான உத்வேகம் பெற்றால், உண்மையில் அது கட்சியின் மறுமலர்ச்சியை துவக்கி வைக்கும்.

காங்கிரஸ்

குலாம் நபி ஆசாத் மரியாதைக்குரிய மூத்தவர். இந்தியா ஒற்றுமை பயணம் குறித்து அவர் கூறிய அவரது கருத்துக்கள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் சிலர்,  ராகுல் காந்தி மேற்கொள்ளும் நடைபயணத்தின் பெயரை இந்தியா ஒற்றுமை என்பதற்கு பதிலாக காங்கிரஸ் ஒற்றுமை என்று வைத்திருக்கலாம் என கருத்து விமர்சனம் செய்து இருந்தனர்.

ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் என்ற நடைபயணத்தை தொடங்குகிறார். இந்திய ஒற்றுமை பயணத்தினபடி, ராகுல் காந்தி மொத்தம் 3,500 கி.மீ. தொலைவை 150 நாட்களில் நிறைவு செய்கிறார். இந்த நடைபயணத்தின்போது பொதுமக்களிடம் ராகுல் காந்தி கலந்து உரையாடுவார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.