ஒவ்வொரு இந்துவும் அறிந்ததை சொன்ன மஹூவா மொய்த்ரா மீதான தாக்குதலால் அதிர்ச்சியடைந்தேன்.. சசி தரூர்

 
மஹூவா மொய்த்ரா

நமது வழிபாட்டு முறைகள் நாடு முழுவதும் வேறுபடுகின்றன என்று ஒவ்வொரு இந்துவும் அறிந்ததை சொன்னதற்காக மஹூவா மொய்த்ரா மீதான தாக்குதலால் இன்னும் அதிர்ச்சியடைந்தேன் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.

லீனா மணிமேகலை என்ற இயக்குனர் தான் இயக்கியுள்ள காளி என்ற ஆவணப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தன்னுடைய டிவிட்டரில் பதவிட்டிருந்தார். அந்த போஸ்டர் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில், காளி போல் வேடமணிந்த ஒரு பெண் தன் வாயில் சிகரெட்டுடன், கையில் பால்புதுமையினர் (எல்.ஜி.பி.டி.) கொடியை பிடித்திருப்பது போன்று உள்ளது. இந்த போஸ்டர் வெளியான சில மணிநேரங்களிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த போஸ்டர் இந்து மதத்தை அவமதிப்பதாகவும், லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சர்ச்சைக்குரிய காளி பட போஸ்டர்

இந்நிலையில், அந்த  போஸ்டருக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா தெரிவித்த கருத்து புதிய சர்ச்சையை கிளப்பியது. காளி போஸ்டர் தொடர்பாக மஹூவா மொய்த்ரா கூறியதாவது: இந்து மதத்திற்குள், காளி வழிபாட்டாளராக இருப்பதால் எனது காளியை அப்படி கற்பனை செய்ய எனக்கு சுதந்திரம் உள்ளது. அதுவே எனது சுதந்திரம், யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தக் கூடாது என்று நினைக்கிறேன். உங்கள் கடவுளை நீங்கள் எவ்வளவு வணங்க வேண்டுமோ அதே அளவுக்கு எனக்கு சுதந்திரம் இருக்கு. என்னை பொறுத்தவரை காளி தேவி இறைச்சி உண்ணும்  மற்றும் மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம். நீங்கள் தாராபித் (மேற்கு வங்கம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ஒரு பெரிய சக்தி பீடம்) சென்றால் சாதுக்கள் புகைப்பிடிப்பதை காணலாம். அது காளியை மக்கள் (அங்கு) வழிபடும் முறை. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனையடுத்து, மஹூவா மொய்த்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. போர்க்கொடி தூக்கியுள்ளது. 

சசி தரூர்

இந்த சூழ்நிலையில், மஹூவா மொய்த்ராவுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக சசி தரூர் டிவிட்டரில், யாரையும் புண்படுத்துவதாக கூறாமல், மதத்தின் எந்த அம்சத்தை பற்றியும் யாரும் பகிரங்கமாக எதுவும் சொல்ல முடியாத நிலைக்கு நாம் வந்து விட்டோம். மஹூவா மொய்த்ரா யாரையும் புண்படுத்த முயற்சிக்கவில்லை என்பது வெளிப்படையானது, மதத்தை தனிமனிதர்கள் தனிப்பட்ட முறையில் கடைப்பிடிக்க விட்டுவிட வேண்டும் என்று நான் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். தீங்கிழைக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட சர்ச்சைக்கு நான் புதியவனல்ல, ஆனால், நமது வழிபாட்டு முறைகள் நாடு முழுவதும் வேறுபடுகின்றன என்று ஒவ்வொரு இந்துவும் அறிந்ததை சொன்னதற்காக மஹூவா மொய்த்ரா மீதான தாக்குதலால் இன்னும் அதிர்ச்சியடைந்தேன். பக்தர்கள் விருப்பமாக கூறுவது அம்மனை விட அவர்களை பற்றி அதிகம் கூறுகிறது என பதிவு செய்துள்ளார்.