சசி தரூர் போட்டியிட பரிசீலனை.. சூடு பிடிக்க தொடங்கிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல்..

 
சசி தரூர்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெறும் என்று அந்த கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது தொடர்பாக சசி தரூர் தற்போது இறுதி முடிவை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதேசமயம் சசி தரூர் மலையாள பத்திரிகை ஒன்றில எழுதியுள்ள கட்டுரையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

காங்கிரஸ்

கட்சியின் முடிவெடுக்கும் அமைப்பான செயற்குழுவின் 12 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலையும் காங்கிரஸ் தலைமை அறிவித்து இருக்க வேண்டும். புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது காங்கிரஸூக்கு  தேவையான மறுமலர்ச்சிக்கான தொடக்கமாகும். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலும் நன்மை பயக்கும். இங்கிலாந்தில் பிரிட்டிஷ் கன்சர்வேடிவ் கட்சியில் தெரசா மே மற்றும் போரிஸ் ஜான்சனுக்கு பதிலாக ஒரு டஜன் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதே போன்ற சூழ்நிலையை காங்கிரஸூக்கு பின்பற்றுவது கட்சியின் மீதான தேசிய ஆர்வத்தை அதிகரிக்கும். மேலும் வாக்காளர்களை ஈர்க்கும்.

ராகுல் காந்தி

இந்த காரணத்திற்காக பல வேட்பாளர்கள் தங்களை பரிசீலிக்க முன்வருவார்கள் என்று நம்புகிறேன். கட்சி மற்றும் தேசத்திற்கான அவர்களின் பார்வைகளை முன்வைப்பது நிச்சயமாக பொது நலனைத் தூண்டும். ஒட்டு மொத்த காங்கிரஸூம் புதுப்பிக்கப்பட வேண்டும். அவர் அல்லது அவளுக்கு (காங்கிரஸ் தலைவருக்கு) ஒரு திட்டம் இருக்க வேண்டும். கட்சிக்கு என்ன பிரச்சினை என்பதை சரி செய்ய, அதே போல் இந்தியாவுக்கான ஒரு பார்வை. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு அரசியல் கட்சி நாட்டுக்கு சேவை  செய்வதற்கான ஒரு கருவியாகும், ஒரு முடிவு அல்ல என தெரிவித்து இருந்தார். அதேசமயம் ஹரிஷ் ராவத் போன்ற மூத்த  தலைவர்கள் ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.