பா.ஜ.க.வுக்கு எதிராக சாமானியர்கள் ஒன்றுபட்டால், பா.ஜ.க.வின் நாட்கள் எண்ணப்படலாம்... சரத் பவார் உறுதி

 
சரத் பவார்

பா.ஜ.க.வுக்கு பாடம் கற்பிக்கும் திறன் சாமானியனுக்கு உண்டு. பா.ஜ.க.வுக்கு எதிராக சாமானியர்கள் ஒன்றுபட்டால், பா.ஜ.க.வின் நாட்கள் எண்ணப்படலாம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் துலேவில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அந்த கட்சியின் தலைவர் சரத் பவார் பேசுகையில் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் பா.ஜ.க. அதிகார ஆணவத்தை வெளிப்படுத்துகிறது. அதிகார ஆணவத்தை வெளிப்படுத்தும் பா.ஜ.க.வுக்கு பாடம் கற்பிக்கும் திறன் சாமானியனுக்கு உண்டு. பா.ஜ.க.வுக்கு எதிராக சாமானியர்கள் ஒன்றுபட்டால், பா.ஜ.க.வின் நாட்கள் எண்ணப்படலாம்.

பா.ஜ.க.

சம்பந்தப்பட்ட எம்.பி. (ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி) குடியரசு தலைவருக்கு எதிராக தவறான வார்த்தை பிரயோகம் செய்து தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் சீண்டினார்கள். நமது எம்.பி. (சுப்ரியா சுலே) தான் அவரது வாகனம் வரை அவரை அழைத்து சென்றார். இல்லையெனில் அங்கு ஏதாவது நடந்திருக்கலாம். பா.ஜ.க.வின் அதிகார திமிர் அது, அவர்கள் உங்களுடன் உடன்படவில்லை என்றால், அவர்கள் தீவிர நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

சோனியா காந்தி

மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி கடந்த 2 ஆண்டுகளாக மாநில சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தலை நடத்த அனுமதிக்கவில்லை. ஆனால் புதிய அரசு அமைந்த 2 நாட்களில் சபாநாயகர் தேர்தலை நடத்த அனுமதி அளித்தார். கவர்னரின் நடத்தை இப்படி இருந்தால், ஜனநாயகத்தின் கதி என்னவாகும். ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் எப்படி வேண்டுமானாலும் பாதுகாப்பது நமது கடமை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.