மத்தியில் பா.ஜ.க.வுக்கு மாற்றாக அமையும் எந்த முயற்சியில் இருந்தும் காங்கிரஸை ஒதுக்கிவிட முடியாது.. சரத் பவார்
மத்தியில் பா.ஜ.க.வுக்கு மாற்றாக அமையும் எந்த முயற்சியில் இருந்தும் காங்கிரஸை ஒதுக்கிவிட முடியாது என சரத் பவார் தெரிவித்தார்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க.வுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை உருவாக்க எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன. அதேசமயம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள், பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியில் காங்கிரஸை சேர்த்து கொள்வதில் விருப்பம் இல்லாமல் உள்ளன. சமீபகாலமாக காங்கிரஸ் எந்தவொரு தேர்தலிலும் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை பதிவு செய்யவில்லை.
மேலும், காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் உட்கட்சி பூசல் அந்த கட்சியை பலவீனப்படுத்துகிறது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் இல்லாமல் பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்க்கட்சி முன்னணி (கூட்டணி) சாத்தியமில்லை என சரத் பவார் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறுகையில், மத்தியில் பா.ஜ.க.வுக்கு மாற்றாக அமையும் எந்த முயற்சியில் இருந்தும் காங்கிரஸை ஒதுக்கிவிட முடியாது என தெரிவித்தார்.
அண்மையில் சிவ சேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரவுத், பா.ஜ.க. எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைப்பது குறித்து பேசுகையில், பழம் பெரும் கட்சியை (காங்கிரஸ்) தேசிய அரசியலில் இருந்து ஒதுக்கி வைப்பதும், அது இல்லாமல் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இணையான எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்குவதும் ஆளும் பா.ஜ.க. மற்றும் பாசிர சக்திகளை வலுப்படுத்துவதற்கு ஒப்பானது என்று தெரிவித்தார்.