எதிர்க்கட்சி ஒன்றுமைக்கான முதல் படி.. தனது எல்.ஜே.டி கட்சியை லாலு பிரசாத் யாதவ் கட்சியுடன் இணைத்த சரத் யாதவ்

 
சரத் யாதவ்

சரத் யாதவ் நேற்று தனது லோக்தந்தரிக் ஜனதா கட்சியை (எல்.ஜே.டி.) லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் (ஆர்.ஜே.டி.) இணைத்தார். 

கடந்த 2018 மே மாதத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவும், அலி அன்வர் ஆகியோரால் லோக்தந்தரிக் ஜனதா கட்சி தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கி 4 ஆண்டுகள் கூட முடிவடையாத நிலையில், சரத் யாதவ் நேற்று தனது லோக்தந்தரிக் ஜனதா கட்சியை (எல்.ஜே.டி.) லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் (ஆர்.ஜே.டி.) இணைத்தார். டெல்லியில் உள்ள சரத் யாதவ் வீட்டில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது. இரு கட்சிகள் இணைப்பு தொடர்பாக சரத் யாதவ் கூறியதாவது:

பா.ஜ.க.

எங்கள் கட்சியை ஆர்.ஜே.டி.யுடன் இணைப்பது எதிர்க்கட்சி ஒன்றுமைக்கான முதல் படியாகும். பா.ஜ.க.வை தோற்கடிக்க ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டியது அவசியம். தற்போதுள்ள நிலையில், ஒன்றிணைவதே எமது முன்னுரிமை.அதன் பின்னரே ஒன்றிணைந்த எதிரணிக்கு யார் தலைமை தாங்குவது என்பது பற்றி சிந்திப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேஜஸ்வி யாதவ்

எல்.ஜே.டி.-ஆர்.ஜே.டி. இணைப்பு குறித்து தேஜஸ்வி யாதவ் கூறுகையில், சரத் யாதவ் எடுத்த முடிவு (எல்.ஜே.டி.யை ஆர்.ஜே.டி.யுடன் இணைப்பது) மக்களின் கோரிக்கையாகும். இது மற்ற எதிர்க்கட்சிகளுக்கு ஒரு செய்தியை அளித்துள்ளது. இது சிறந்த நேரம். 2019ல் (மக்களவை தேர்தலில்) நாம் ஒன்றிணைந்திருக்க வேண்டும். ஆனால், எப்பொழுதும் இல்லாததை விட தாமதமானது என்று தெரிவித்தார்.