பா.ஜ.க. அல்லாத கட்சிகள் தலைமையிலான மாநில அரசுகள் மீது பா.ஜ.க. தனது சித்தாந்தத்தை திணிக்கிறது.. சரத் பவார்
பா.ஜ.க.வின் மத்திய தலைமை பா.ஜ.க. அல்லாத கட்சிகள் தலைமையிலான மாநில அரசுகள் மீது தங்கள் சித்தாந்தத்தை திணிக்கிறது என்று சரத் பவார் குற்றம் சாட்டினார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் சரத் பவார் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் சரத் பவார் பேசியதாவது: பா.ஜ.க.வின் மத்திய தலைமை பா.ஜ.க. அல்லாத கட்சிகள் தலைமையிலான மாநில அரசுகள் மீது தங்கள் சித்தாந்தத்தை திணிக்கிறது.
மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய 2 மாநிலங்களிலும் பா.ஜ.க. அல்லாத அரசுகள் கட்சி தாவல்களால் சீர்குலைந்ததால் அந்த 2 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. அதேபோல் டெல்லியில் ஆட்சியில் இருந்தவர்கள் மகாராஷ்டிராவில் நன்றாக இயங்கும் அரசாங்கத்திடம இருந்து அதிகாரத்தை பறிக்க முடிவு செய்தனர். நாங்கள் சொல்வதை செய்யுங்கள், எங்கள் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையெனில் ஜனநாயக அரசாங்கத்தை செயல்பட விடமாட்டோம் என்பதுதான் அந்த செய்தி.
ஆனால் இதுபோன்ற விஷயங்கள் நீடிக்காது. உலகில் எங்கு எதேச்சதிகாரம் தலைதூக்கினாலும் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. அண்டை நாடான இலங்கையில், ஒரு குடும்பம் (ராஜபக்சேக்கள்) அதிகாரத்தை எவ்வாறு தவறாகப் பயன்படுத்தியது மற்றும் அதன் ஆட்சி எவ்வாறு மக்களால் தூக்கியெறியப்பட்டது என்பதை நாம் பார்த்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.