பா.ஜ.க.வில் இணைந்த காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் தம்பி மகன்..

 
முபாஷிர் ஆசாத் மற்றும் ரவீந்தர் ரெய்னா

ஜம்மு அண்ட் காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் தம்பி மகன் முபாஷிர் ஆசாத் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

கடந்த 2020ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவர் அவசியம் என்பதை வலியுறுத்தி ஜிதின் பிரசாதா, கபில் சிபல் மற்றும் குலாம் நபி ஆசாத் உள்பட அந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இது அந்த கட்சிக்குள் பெரிய பிரளயத்தை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியில் ஜி23 தலைவர்கள் ஒரங்கப்பட்டனர். இதனால் ஜிதின் பிரசாதா உள்பட பல செல்வாக்கு மிக்க பிரபலங்கள் காங்கிரசிலிருந்து விலகி வேறு கட்சிகள் இணைந்தனர்.

குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத்துக்கு அண்மையில் மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கியது. ஆனால் காங்கிரஸ் கட்சி தலைவர்களில் பலர் அதனை விமர்சனம் செய்தனர். இதனால் குலாம் நபி ஆசாத் காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைவார் அல்லது தனிக்கட்சி தொடங்குவார் என பரவலாக பேசப்பட்டது. ஆனால் குலாம் நபி ஆசாத் தொடர்ந்து காங்கிரஸில் இருந்து வருகிறார். இந்நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணம் குலாம் நபி ஆசாத்தின் இளைய சகோதரர் லியாகத் அலியின் மகன் முபாஷிர் ஆசாத் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். முபாஷிர் ஆசாத் மற்றும் அவரது ஆதரவாளர்களை ஜம்மு காஷ்மீர் பா.ஜ.க. தலைவர் ரவீந்தர் ரெய்னா மற்றும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் கட்சிக்குள் வரவேற்றனர்.

காங்கிரஸ்

பா.ஜ.க.வில் இணைந்த பிறகு முபாஷிர் ஆசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் கட்சி உட்கட்சி பூசலில் சிக்கித் தவிக்கிறது. மோடியின் தலைமையில் மக்கள் நலனுக்கான பணிகள் களத்தில் நடைபெற்று வருகின்றன. கட்சியின் கவர்ச்சியான தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத்தை காங்கிரஸ் நடத்திய விதம், பொதுமக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. தேசத்துக்கான அவரது (குலாம் நபி ஆசாத்) சேவைக்காக அவர் பிரதமரால் பாராட்டப்பட்டார். ஆனால் கட்சியால் (காங்கிரஸ்) ஒரங்கட்டப்பட்டார். பா.ஜ.க.வில் சேரும் திட்டம் குறித்து எனது சித்தப்பாவிடம் விவாதிக்கவில்லை என தெரிவித்தார். 2009ல் குலாம் நபி ஆசாத்தின் சகோதரர் குலாம் அலி பா.ஜ.க.வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.