"சசிகலாவுக்கு என்ன நடந்துச்சு.. ஆளுநர் டெல்லில போய் படுத்துகிட்டாரு" - சீமான் ஓபன் டாக்!

 
சசிகலா

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேலூர் மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே தேர்தலை நேர்மையாக நடத்துவதில்லை. இருவரும் மாறிமாறி குற்றம்சாட்டிக் கொண்டாலும், அவற்றில் உண்மை இருக்கிறது. வேட்பாளர்களை மிரட்டி வேட்புமனுக்களை வாபஸ் வாங்க வைத்த ஆளுங்கட்சியின் செயலை, சர்வாதிகாரப் போக்கு என்று கூற முடியாது. 

அது ஆட்சியதிகார திமிர், கொடுங்கோண்மை. எங்கள் கட்சியைச் சேர்ந்த 60 பேரை வேட்புமனுக்களை திரும்பபெற வைத்துவிட்டனர். திமுக எப்போதும் இதைத் தான் செய்யும். மாநகராட்சித் தேர்தலில் மறைமுக தேர்தல் அவசியமற்றது. நேரடி தேர்தல்தான் சரி. யார் என்னுடைய மாநகராட்சியின் மேயராக வரப்போகிறார் என்று தெரியாமல், எப்படி வாக்களிப்பது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாமன்ற உறுப்பினர்களால் மேயர் தேர்வு செய்யப்படுவார் என்றால், அதற்காக எவ்வளவு பெரிய பேரம் நடக்கும். இது ஜனநாயகமா? பணநாயகமா? 

இந்த நிலையை மாற்ற வேண்டும். தேர்தல் நேரத்தில்தான், நீட் தேர்வு குறித்து பேசப்படும், பாஜக கார் எரியும், அலுவலகத்தில் குண்டு வெடிக்கும், காவித்துண்டு உடுத்திக்கொண்டு கல்லூரிக்குச் செல்வார்கள். தேர்தல் நேரங்களில், இவற்றை பயன்படுத்திக் கொண்டு இந்த கீழான உணர்ச்சியை கிளறிக் கிளறி அதிகாரத்துக்கு வந்துவிடுகின்றனர். ஆளுநரை திரும்ப பெற தமிழக அரசு கூறினால், திரும்ப பெற்று விடுவார்களா?  வித்யாசாகர் ராவ் ஆளுநராக இருந்தபோது, சசிகலா பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு கூறினார். ஆனால், அவர் டெல்லிக்குச் சென்று படுத்துக்கொண்டார். அவரை யாரால் என்ன செய்ய முடிந்தது?” என்றார்.