மிகப்பெரிய பொய்யர் பிரதமர் நரேந்திர மோடி தான்... ஆம் ஆத்மி தாக்கு

 
சவுரப் பரத்வாஜ்

மணிஷ் சிசோடியாவை விமர்சித்த பா.ஜ.க.வினருக்கு, மிகப்பெரிய பொய்யர் பிரதமர் நரேந்திர மோடி தான் என்று ஆம் ஆத்மி பதிலடி கொடுத்துள்ளது.

டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான மணிஷ் சிசோடியா நேற்று முன்தினம் டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பான விசாரணைக்காக  சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். சி.பி.ஐ. அதிகாரிகள் சுமார் 9 மணி நேரம் மணிஷ் சிசோடியாவிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். மணிஷ் சிசோடியாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியதை குறிப்பிட்டு அவரை பா.ஜ.க. கடுமையான தாக்கினர். இதற்கு ஆம் ஆத்மி கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை குறிவைக்கும் ஆம் ஆத்மி… உத்ரகாண்ட் பா.ஜ.க. முதல்வரை விமர்சித்த சிசோடியா

டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளருமான சவுரப் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொய்யான குற்றச்சாட்டின் பேரில் மணிஷ் சிசோடியாவை சி.பி.ஐ. விசாரித்தது. அவரை (மணிஷ் சிசோடியா) பொய்க் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. கூறுகிறது. ஆனால் மிகப் பெரிய பொய்யர் பிரதமர் மோடிதான் என்று நான் நம்புகிறேன். 

மோடி

அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. நடுநிலை அமைப்புகள் என்றும், மத்திய அரசுக்கும் அவர்களுக்கும் (விசாரணை அமைப்புகள்) எந்த தொடர்பும் இல்லை என்ற மிகப்பெரிய பொய்யை ஒப்புக்கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு நான் சவால் விடுகிறேன். இதை தற்போது நடக்கும் இன்டர்போல் கூட்டத்தில் பிரதமர் மோடி சொல்ல வேண்டும். கோவிட் தொற்றுநோயின் முடிவு பற்றிய வலியுறுத்தல்கள், கருப்பு பணத்தை மீட்பது பற்றிய கருத்துக்கள், போராட்டத்துக்கு பிறகு திரும்ப பெற்ற விவசாய சட்டங்கள், கங்கை புத்துயிர் திட்டம், வீட்டுவசதி, ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் மற்றும் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான இலக்கு ஆகியவை பிரதமர் மோடியின் ஏழு பெரிய பொய்கள்.