அதிமுகவை கட்டிக்காக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது; நான் பார்த்துக்கொள்கிறேன் - சசிகலா

 
sasikala

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தனது புரட்சிகர அரசியல் பயணத்தை திருத்தணியில் தொடங்கினார்.

sasikala

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை கடந்த 10 நாட்களாக நீடித்து வரும் நிலையில் நேற்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல், ஒற்றை தலைமை தீர்மானத்துடன் அடுத்த பொதுக் குழுக் கூட்டமானது வருகின்ற ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுக அவைத்தலைவர் அறிவித்தார். ஒற்றைத் தலைமைக்கு தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மீண்டும் பொதுக்குழுக் கூட்டம் நடத்துவதை கண்டித்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழுக் கூட்டத்தில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர்.

அதிமுகவில் கடந்த 10 நாட்களாக நீடித்து வரும் இந்த ஒற்றை தலைமை பிரச்சனை தற்போது வரை ஒரு முடிவு எட்டப்படாத நிலையில், ஓபிஎஸ் இபிஎஸ் இருவருமே தலைமைக்கு தகுதி இல்லாதவர்கள் என்றும் சசிகலா தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என 30க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் சென்னை தி.நகரில் உள்ள சசிகலா இல்லத்தின் முன்பு என கூடி முழக்கம் எழுப்பினர்.

இந்நிலையில் திருத்தணியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “அதிமுகவை கட்டிக்காக்கும் பொறுப்பு தனக்கு உள்ளது. எனது தலைமையில் அதிமுக இருக்க வேண்டும் என தொண்டர்கள் நினைக்கின்றனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுக  ஒரு தலைமையின் கீழ் நிச்சயம் வரும். அதிமுகவில் தற்போது நடக்கக்கூடிய நிகழ்வுகள் வருத்தம் அளிக்கிறது. அடுத்து வருவது அதிமுக ஆட்சிதான். அது மக்களின் ஆட்சியாக இருக்கும். இது எங்களுக்குள் இருக்கும் பிரச்சினை. இதனை நாங்கள் சரி செய்து கொள்வோம். அதிமுகவில் பிளவு என்பது நிச்சயம் திமுகவிற்கு தான் சாதகமாக அமையும். திமுகவிற்கே இது லாபம். எம்.ஜி.ஆர் வகுத்த சட்ட திட்டங்களை தனி ஒரு நபர் மாற்ற முடியாது.” எனக் கூறினார்.