சசிகலா, கேசிபி நீக்கம் செல்லாது! அட, இது செம்ம பாயிண்ட்
கட்சியை உடைத்து இரட்டை இலை சின்னத்தை முடக்கிய பன்னீர்செல்வத்திற்கு பொது மன்னிப்பு வழங்கி பதவி வழங்குவதற்காக பொதுக்குழுவை திருத்த வேண்டி இருந்தது. அதற்கு அதிகாரம் இல்லாதபோது கட்சி சட்டத்தில் திருத்தம் செய்ததை ஏற்றுக்கொண்டார்கள். 2021 ஒல் டிசம்பர் மாதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடந்தது. அந்த தேர்தல் முடிவுக்கு பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறவில்லை. அதனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு காலாவதியாகிவிட்டது. இனிமேல் பன்னீர்செல்வம் அதிமுகவின் பொருளாளர் மட்டுமே. எடப்பாடி பழனிச்சாமி தலைமை கழக செயலாளர் மட்டுமே. இது தான் தற்போதைய நிலை என்று சொல்லியிருந்தார் முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் .
தொடர்ந்து அது குறித்து பேசிய சிவி சண்முகம், பொறுப்பாளர்கள் மட்டுமே இனிமேல் கட்சியை வழி நடத்துவார்கள். ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் நீக்கப்பட்டாலும் கட்சி வீதி 20 பிரிவு-அ’வின்படி புதியவர் வரும் வரைக்கும் பொறுப்பாளர்கள் கட்சியை வழி நடத்துவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
சண்முகத்தின் இந்தப் பேச்சை எடுத்து அவருக்கே திருப்பி பலரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டது என்றால் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சண்முகத்தின் எம்பி பதவி பொறுப்பும் செல்லாது என்று சொல்லி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அதிமுகவின் முன்னாள் எம்பியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே. சி. பழனிச்சாமி இது குறித்து பேசிய போது, ‘’சி.வி.சண்முகம் விளக்கமளித்தபடி, 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி நிலவரப்படி, ஓ.பி.எஸ் பொருளாளர் மட்டுமே, இ.பி.எஸ் தலைமையகச் செயலாளர் மட்டுமே. கே.சி.பழனிசாமி, சசிகலா உள்ளிட்ட அனைத்து நீக்கங்களும் செல்லாது’’என்கிறார்.
அவர் மேலும், ‘’தொண்டர்களால் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற என் போன்றவர்களின் கோரிக்கை 2017ம் ஆண்டிலேயே ஏற்கப்பட்டிருந்தால் இன்றைக்கு அதிமுகவுக்கு இவ்வளவு சிக்கல்கள் வந்திருக்காது. ஓபிஎஸ்க்கு பதவி கொடுப்பதற்காக அதிமுக விதிகளை திருத்தினோம் என்று சொல்கிறார் சிவி சண்முகம். அப்படி என்றால் தொண்டர்களின் ஒட்டுமொத்த நலனை ஒருவரின் நலனுக்காக இபிஎஸ் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் எல்லோரும் சேர்ந்து திருத்தம் கொண்டு வந்திருக்கிறார்கள்’’என்கிறார்.
இதற்கு அதிமுகவின் முன்னாள் ஐடி விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன், ‘’அட இது செம்ம point..’’ என்று கமெண்ட் அடித்திருக்கிறார்.