நான் யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. நான் உண்மையைத் தான் சொன்னேன்.. சிவ சேனாவின் சஞ்சய் ரவுத்

 
சஞ்சய் ரவுத்

சிவ சேனாவின் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், நான் யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. நான் உண்மையைத் தான் சொன்னேன் என்று சஞ்சய் ரவுத் விளக்கம் கொடுத்துள்ளார்.

மும்பையில் தாஹிசார் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற சிவ சேனா கட்சி கூட்டத்தில் அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரவுத் பேசுகையில்,  இந்த நாற்பது எம்.எல்.ஏ.க்களின் (சிவ சேனா கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள்)  40 உடல்கள் கவுகாத்தியில் இருந்து வந்தவுடன், அவை நேரடியாக பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து, கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சஞ்சய் ரவுத்தின் பேச்சு சர்ச்சையை கிளப்பின.

கிளர்ச்சி சிவ சேனா எம்.எல்.ஏ.க்கள்

இந்நிலையில், 40 உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்ற அறிக்கை குறித்து சஞ்சய் ரவுத் தற்போது விளக்கம் அளித்துள்ளார். சஞ்சய் ரவுத் கூறுகையில், நான் மீண்டும் சொல்கிறேன், 40 ஆண்டுகள் கட்சியில் இருந்துவிட்டு ஓடிப்போனவர்களின் ஆத்மா இறந்து விட்டது. அவர்களிடம் எதுவும் இல்லை. இது டாக்டர் ராம் மனோகர் லோகியா சொன்ன வரிகள். நான் யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. நான் உண்மையைத் தான் சொன்னேன் என தெரிவித்தார்.

சுனில் ரவுத்

அதேசமயம் சஞ்சய் ரவுத்தின் சகோதரர் சுனில் ரவுத், ஏக்நாத் ஷிண்டே முகாமில் இணையபோவதாக செய்தி வெளியானது. ஆனால் அதனை அவர் மறுத்துள்ளார். இது தொடர்பாக சுனில் ரவுத் இது தொடர்பாக கூறுகையில், நான் எதற்கு கவுகாத்திக்கு செல்வேன்? இயற்கை அழகை காண கோவா செல்கிறேன். அந்த துரோகிகளின் முகத்தை பார்க்க நான் கவுகாத்தி செல்வேனா? நான் ஒரு சிவ சேனா வீரன், எனது கடைசி மூச்சு வரை கட்சிக்காக பாடுபடுவேன் என தெரிவித்தார்.