நாட்டில் ஏதாவது நடந்தால் அதற்கு பா.ஜ.க.தான் பொறுப்பு.. சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத்

 
பா.ஜ.க.

அல் கொய்தா தற்கொலை படை தாக்குதலை நடத்துவோம் என மிரட்டல் விடுத்ததையடுத்து, நாட்டில் ஏதாவது நடந்தால் அதற்கு பா.ஜ.க.தான் பொறுப்பு என சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக சுமார் 2 வாரங்களுக்கு முன் செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நடந்த விவாதத்தில் பா.ஜ.க.வின் தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசுகையில், நபிகள் நாயகத்துக்கு எதிராக பேசியதாக கூறப்படுகிறது. இது உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் முகமது நபியை அவமதித்தற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, நம் நாட்டில் தற்கொலை மனித வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தப்போவதாக அல்கொய்தா இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்தது. 

சஞ்சய் ரவுத்

அல்கொய்தா மிரட்டல் விடுத்தது தொடர்பாக சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சஞ்சய் ரவுத் கூறுகையில், நாட்டில் எல்லாம் நன்றாக இருந்தது. ஆனால் இரு மதத்தினரிடையே மோதலை பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் விரும்புகிறார். நாட்டில் ஏதாவது நடந்தால் அதற்கு பா.ஜ.க.தான் பொறுப்பு. நாம் நமது வேலையை செய்வோம். ஆனால் இதற்கு பின்னால் இருப்பவர்களை அவர்கள் எப்போது அறிவார்கள்? என தெரிவித்தார்.

தீவிரவாதிகள்

கடந்த சில தினங்களுக்கு முன் தீவிரவாத அமைப்பான அல்கொய்தா வெளியிட்டுள்ள மிரட்டல் கடிதத்தில், காவி தீவிரவாதிகள் இப்போது டெல்லி, மும்பை, உத்தர பிரதேசம் மற்றும் குஜராத்தில் தங்கள் முடிவுக்கு காத்திருக்க வேண்டும். அவர்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது அவர்களின் பாதுகாப்பு ராணுவ மண்டலங்களிலோ தஞ்சம் அடையக் கூடாது. நம் நபியை அவமதிப்பவர்களை கொல்வோம், நம் நபியை இழிவுபடுத்த துணிந்தவர்களின் பட்டாளத்தை தகர்க்க எங்கள் உடலிலும், குழந்தைகளின் உடலிலும் வெடிகளை கட்டி விடுவோம். அமைதியும் பாதுகாப்பும் அவர்களை காப்பாற்றாது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.