ராஜ் தாக்கரே பா.ஜ.க.வின் ஒலி பெருக்கியாக மாறியுள்ளார்... சிவ சேனா தாக்கு

 
சிவ சேனா

ராஜ் தாக்கரே பா.ஜ.க.வின் ஒலி பெருக்கியாக மாறியுள்ளார் என சிவ சேனா குற்றம் சாட்டியுள்ளது.

மகாராஷ்டிராவில்  கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜ் தாக்கரே பேசுகையில், மே 3ம் தேதிக்குள் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் ஹனுமான் பாடல்களை ஒலிபெருக்கிகளில் இசைப்போம். இது ஒரு சமூக பிரச்சினை, மதப் பிரச்சினை அல்ல. மாநில அரசுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். இந்த விஷயத்தில் நாங்கள் பின்வாங்க மாட்டோம். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை செய்யுங்கள் என தெரிவித்தார். மேலும் தானேவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராஜ் தாக்கரே வாளை சுழற்றி காட்டியுள்ளார். 

ராஜ்தாக்கரே

இதனையடுத்து, தானே கூடத்தில் வாள் காட்டியதற்காக மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ராஜ்தாக்கரே  பா.ஜ.க.வின் ஒலி பெருக்கியாக மாறியுள்ளார் என சிவ சேனா தாக்கியுள்ளது. சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் கூறியதாவது: உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சியுடன் (சிவ சேனா) நேரடியாக போட்டியிடும் தைரியம் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவுக்கு இல்லை. 

பா.ஜ.க.

மறைந்த பால்தாக்கரேவுக்கு மட்டுமே அரசாங்களுக்கு இறுதி எச்சரிக்கை கொடுக்கும் திறனும் அதிகாரமும் இருந்தது. ராஜ் தாக்கரே மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து மன்னிப்பு பெற்று பா.ஜ.க.வின் ஒலி பெருக்கியாக மாறியுள்ளார். இந்த ஒலி பெருக்கி விரக்தியில் இருந்து ஒலிக்கிறது ஆனால் மக்கள் அதை அணைத்து விடுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.