நாட்டின் வளர்ச்சியில் நேருவின் பங்களிப்பு இல்லையெனில் நாடு பாகிஸ்தானாக மாறியிருக்கும்.. காங்கிரஸை சமாதானம் செய்த சஞ்சய் ரவுத்

 
சஞ்சய் ரவுத்

நாட்டின் வளர்ச்சியில் நேருவின் பங்களிப்பு இல்லையெனில் நாடு பாகிஸ்தானாக மாறியிருக்கும் என்று காங்கிரஸை சமாதானம் செய்வது போல் சஞ்சய் ரவுத் பேசியுள்ளார்.

ராகுல் காந்தி கடந்த சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிராவின் ஹிங்கோலி நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்தபோது ஆங்கிலேயர்களுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் தன்னை மன்னித்து  சிறையில் இருந்து விடுவிக்கும்படி வேண்டுகோள் விடுத்து இருந்தார். வீர் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஓய்வூதியம் பெற்றார், காங்கிரஸூக்கு எதிராக வேலை செய்தார். சிறையில் இருந்து வெளியே வந்த சாவர்க்கர் ஆங்கிலேயர்களின் கோரிக்கையை ஏற்று அவர்கள் படையில் சேர்ந்தார் என்று தெரிவித்து இருந்தார். சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவ சேனா பிரிவு கடும் கண்டனம் தெரிவித்தது.

சாவர்க்கர்

உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவ சேனா பிரிவின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கூறுகையில், வீர் சாவர்க்கரை மரியாதைக்குரிய நபராக நாங்கள் கருதுகிறோம். சாவர்க்கருக்கு எதிராக இது போன்ற கருத்துக்களை ராகுல் காந்தி தொடர்ந்து வெளிப்படுத்தினால், மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி கூட்டணியை உடைக்கப்படலாம் என எச்சரிக்கை செய்து இருந்தார். இந்நிலையில், நேற்று, நாட்டின் வளர்ச்சியில் நேருவின் பங்களிப்பு இல்லையெனில் நாடு பாகிஸ்தானாக மாறியிருக்கும் என்று காங்கிரஸை சமாதானம் செய்வது போல் சஞ்சய் ரவுத் பேசியுள்ளார்.

நேரு

சஞ்சய் ரவுத் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வீர் சாவர்க்கர், சுபாஷ் சந்திரபோஸ், பண்டிட் ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல் மற்றும் மகாத்மா காந்தி உள்பட இந்த நாட்டிற்காக சுதந்திர போராட்டத்தில் தங்கள் மகிழ்ச்சியை தியாகம் செய்த அனைவரின் மீது முழு நாடும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு பண்டித ஜவஹர்லால் நேரு ஏராளமான பங்களிப்புகளை செய்தார். இல்லையெனில் நாடு பாகிஸ்தானை போல மாற அதிக நேரம் எடுத்திருக்காது. இந்த நாடு பண்டிட் ஜவஹர்லால் நேருவின் நிலம் என தெரிவித்தார்.