நவ்னீத் ரானா மற்றும் ரவி ரானா போலி இந்துத்துவவாதிகள், மகாராஷ்டிராவின் எதிரிகள்... சஞ்சய் ரவுத்

 
 ரவி ரானா மற்றும் நவ்னீத் ரானா

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டு முன் ஹனுமன் சாலீசா பாடபோவதாக பரபரப்பை ஏற்படுத்திய நவ்னீத் ரான மற்றும் ரவி ரானா ஆகியோர் போலி இந்துத்துவவாதிகள், மகாராஷ்டிராவின் எதிரிகள் என சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டினார்.

அமராவத மக்களை தொகுதி உறுப்பினர் நவ்னீத் ரானாவும், அவருடைய கணவரும், சுயேட்சை எம்.எல்.ஏ.வுமான ரவி ரானாவும், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பு ஹனுமன் சாலீசா பாடப்போவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தனர். இதற்கு சிவ சேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மும்பை போலீசார் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடக் கூடாது என நவ்னீத் ரானா மற்றும் ரவி ரானாவை எச்சரிக்கை செய்தனர்.

உத்தவ் தாக்கரே

மும்பை போலீசார் உத்தவ் தாக்கரே வீட்டில் பாதுகாப்பை பலப்படுத்தினர். அதேசமயம் நவ்னீத் ரானா தம்பதியரின் வீட்டின் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டனர். அதேசமயம் நேற்று ரானா தம்பதியரின் வீட்டின் முன்பு சிவ சேனா தொண்டர்கள் போராட்டம் நடத்தி்னர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதற்கிடையே மும்பை நடக்கும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதால், இந்த சூழ்நிலையில் சட்டம் ஒழங்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக முதல்வர் வீடு முன்பு ஹனுமன் சாலிசா பாடுவதை கைவிடுவதாக நவ்னீத் ரானா தம்பதியினர் அறிவித்தனர். இந்நிலையில், சிவ சேனா கட்சியினர் மத நம்பிக்கையை புண்படுத்தியதாக அளித்த புகாரின் அடிப்படையில், ரானா தம்பதியினரை மும்பை  போலீசார் கைது செய்தனர்.

சஞ்சய் ரவுத்

இது தொடர்பாக சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் கூறுகையில், கடந்த சில நாட்களாக சில போலி இந்துத்துவவாதிகள் (நவ்னீத் ரானா, ரவி ரானா) மும்பையில் சூழலை கெடுக்க முயன்றனர். முதல்வர் இல்லத்தில் வேறு ஏதாவது  செய்ய சதி நடந்தது. தோளில் துப்பாக்கியை வைத்து தாக்க முயன்றது பா.ஜ.க.. நவ்னீத் ரானா மற்றும் ரவி ரானா மகாராஷ்டிராவின் எதிரிகள். அவர்கள் பின்னால் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். மாதோஸ்ரீயில் (முதல்வர் உத்தவ்  தாக்கரே இல்லம்) ஹனுமன் சாலிசாவை கோஷமிடுவோம் என்று வெளியில் இருந்து யாராவது கூறினால், சிவ சைனிகள் அமைதியாக உட்கார மாட்டார்கள். எங்கள் இல்லத்துக்கு வர முயற்சித்தால், அதே மொழியில் பதில் சொல்ல எங்களுக்கும் உரிமை உண்டு. இங்கு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவோம் என்று மிரட்டல் விடாதீர்கள் என்று தெரிவித்தார்.