காஷ்மீர் மீண்டும் எரிகிறது.. ஆனால் டெல்லியின் முக்கிய நபர்கள் படங்களை விளம்பரப்படுத்துவதில் மும்முரம்.. சஞ்சய் ரவுத்

 
சஞ்சய் ரவுத்

காஷ்மீர் மீண்டும் எரிகிறது ஆனால் டெல்லியின் முக்கிய நபர்கள் படங்களை விளம்பரப்படுத்துவதில் மும்முரமாக உள்ளன என மத்திய பா.ஜ.க. அமைச்சர்களை சஞ்சய் ரவுத் மறைமுகமாக குற்றம் சாட்டினார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில்  கடந்த சில நாட்களாக காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் அரசு பணியாளர்களை  குறிவைத்து  தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தீவிரவாதிகள் அவர்களை குறிவைத்து கொலை செய்து வருகின்றனர். 2012ல் பிரதமரின் தொகுப்பின் கீழ் வேலை வழங்கப்பட்ட  பல காஷ்மீர் பண்டிட்டுகள், ராகுல் பட் கொல்லப்பட்டதில் இருந்து பாதுகாப்பு கோரி பள்ளத்தாக்கில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தீவிரவாதிகள் தங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதால், காஷ்மீரி பண்டிட்டுகள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து இடமபெயர தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  

உத்தவ் தாக்கரே

காஷ்மீரில் நடந்த பல இலக்கு கொலைகளை தொடர்ந்து அங்குள்ள நிலைமை குறித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பேசுகையில், காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு பள்ளதாக்கில் மீள்குடியேற்றம் கனவு காட்டப்பட்டது. ஆனால் அவர்கள் குறிவைக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். பண்டிட்களின் வெளியேற்றம் அதிர்ச்சி அளிக்கிறது. காஷ்மீர் பண்டிட் தலைவர்களுடன் எங்கள் அரசாங்கம் தொடர்பில் உள்ளது. அவர்களின் பாதுகாப்புக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் எங்கள் அரசாங்கம் செய்யும் என தெரிவித்தார்.

காஷ்மீர் பண்டிட்டுகள் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், காஷ்மீர் நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக சஞ்சய் ரவுத் கூறியதாவது: காஷ்மீர் மீண்டும் எரிகிறது. அங்கு நிலைமை கட்டுங்கடங்காமல் போய்விட்டது ஆனால் டெல்லியின் (மத்திய அரசு) முக்கிய நபர்கள் படங்களை விளம்பரப்படுத்துவதில் மும்முரமாக உள்ளனர். காஷ்மீரிகளின் பேச்சை கேட்க யாரும் தயாராக இல்லை. காஷ்மீர் பண்டிட்டுகள் கிளர்ச்சி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அரசாங்கம் என்ன செய்கிறது? இவ்வாறு அவர் தெரிவித்தார்.