சிவாஜி மகாராஜ் அவமதிப்பு விவகாரம்... பா.ஜ.க. தலைவர்களை சாடிய உத்தவ் தாக்கரே பிரிவு சிவ சேனாவின் சஞ்சய் ரவுத்
பா.ஜ.க.வினர் சிவாஜியை ஒரு போதும் நேசித்ததில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியை சத்ரபதி சிவாஜி மகாராஜாவுடன் ஒப்பிட்டு போர்டுகள் இருந்தன என்று உத்தவ் தாக்கரே பிரிவு சிவ சேனாவின் எம்.பி. சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டினார்.
உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரவுத் ஊடகங்களில் பேசுகையில் கூறியதாவது: சத்ரபதி சிவாஜி மகாராஜின் அவமதிப்பு அனைவராலும் கவனிக்கப்பட்டது. அடிப்படையில், பா.ஜ.க.வினர் சிவாஜியை ஒரு போதும் நேசித்ததில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியை சத்ரபதி சிவாஜி மகாராஜாவுடன் ஒப்பிட்டு போர்டுகள் இருந்தன.
சிவாஜி மீதான அன்பு உண்மையாக இருந்திருந்தால், சிவாஜி மகாராஜை அவமானப்படுத்தியதற்கு கவர்னரிடம் பதில் சொல்லுமாறு முதல்வரும் (ஏக்நாத் ஷிண்டே), துணை முதல்வரும் (தேவேந்திர பட்னாவிஸ்) ராஜ்பவன் (கவர்னர் மாளிகை) கதவை தட்டியிருப்பார்கள். ஒட்டு மொத்த அரசும் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து இந்த கவர்னரை (பகத் சிங் கோஷ்யாரி) உடனடியாக மாற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கும். ஆனால் அது நடக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி கடந்த நவம்பர் மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், உங்கள் லட்சிய மனிதர் யார் என்று யாராவது கேட்டால், நீங்கள் அவரை தேடி வெளியே செல்ல வேண்டியதில்லை. மகாராஷ்டிராவில் நீங்கள் அவர்களை காணலாம். சத்ரபதி சிவாஜி மகாராஜ் இப்போது பழைய லட்சிய மனிதராகி விட்டார், பாபாசாகேப் அம்பேத்கர் முதல் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வரையிலான தலைவர்களில் ஒரு புதிய லட்சிய மனிதரை நீங்கள் காணலாம் என தெரிவித்தார். சத்ரபதி சிவாஜி மகாராஜ் குறித்த கவர்னர் பகத் சிங் கோஷ்யாரின் கருத்துக்கு ஆளும் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் உள்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.