குஜராத் ஹோட்டலில் சிவ சேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்.. பா.ஜ.க.வை எச்சரித்த சஞ்சய் ரவுத்

 
அடுத்த 25 வருஷத்துக்கு சிவ சேனா தலைமையில்தான் ஆட்சி- சஞ்சய் ரவுத் உறுதி

மகாராஷ்டிரா அரசை கவிழ்க்க முயற்சிகள் நடக்கிறது ஆனால் ராஜஸ்தான் அல்லது மத்திய பிரதேசத்தில் இருந்து மகாராஷ்டிரா வித்தியாசமானது என்பதை பா.ஜ.க. நினைவில் கொள்ள வேண்டும் என சிவ சேனாவின் சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் சட்டமேலவையில் காலியாக உள்ள  10 இடங்களுக்கான தேர்தல் கடந்த 20ம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 10 இடங்களுக்கு மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆளும் கூட்டணியை சேர்ந்த சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலா 2 வேட்பாளர்களும், பா.ஜ.க. 5 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க. 5 இடங்களில் வெற்றி பெற்றது. சிவ சேனா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. 

பா.ஜ.க.

சிவ சேனா எம்.எல்.ஏ.க்களில் சிலர் கட்சி மாறி வாக்களித்ததால் பா.ஜ.க.வின் 5வது வேட்பாளர் வெற்றி பெற்றதாகவும், சிவ சேனா வேட்பாளர் தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மேலவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, சிவ சேனாவின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவரும், அம்மாநில கேபினட் அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, சில சிவ சேனா எம்.எல்.ஏ.க்களுடன் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஹோட்டலுக்கு ரகசியமாக சென்றார். சிவ சேனா தலைமை தன்னை ஓரங்கட்டுவதாக கருதி ஏக்நாத் ஷிண்டே அதிருப்தியில் இருப்பதாகவும், பா.ஜ.க.வுடன் சிவ சேனா கூட்டணி வைக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

ஏக்நாத் ஷிண்டே

ஏக்நாத் ஷிண்டே சிவ சேனா எம்.எல்.ஏ.க்களுடன் ரகசியமாக சென்றதையடுத்து, மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிவ சேனாவின் மூத்த  தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரவுத் கூறுகையில், சிவ சேனாவின் சில எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஏக்நாத் ஷிண்டேவை அணுக முடியவில்லை. மகா விகாஸ் அகாடி அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, ஆனால் ராஜஸ்தான் அல்லது மத்திய பிரதேசத்தில் இருந்து மகாராஷ்டிரா வித்தியாசமானது என்பதை பா.ஜ.க. நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.