சிசோடியாவுக்கு சி.பி.ஐ. சம்மன்.. ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை மட்டுமே பா.ஜ.க. துன்புறுத்துகிறது... சஞ்சய் சிங் குற்றச்சாட்டு
மணிஷ் சிசோடியாவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியதை குறிப்பிட்டு, ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை மட்டுமே பா.ஜ.க. துன்புறுத்துகிறது என்று சஞ்சய் சிங் குற்றம் சாட்டினார்.
டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக அக்டோபர் 17ம் தேதியன்று (இன்று) சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி, டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மணிஷ் சிசோடியோவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மணிஷ் சிசோடியாவை கைது செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டு வருகிறது என ஆம் ஆத்மி கட்சி கூக்குரலிட்டது.
மணிஷ் சிசோடியாவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் சிங் கூறியதாவது: நாளை (இன்று) சி.பி.ஐ. மற்றும் பா.ஜ.க.வினர் விசாரணைக்காக சி.பி.ஐ. அலுவலகத்துக்கு மணிஷ் சிசோடியாவை அழைத்துள்ளனர். உண்மையில் மணிஷ் சிசோடியாவை சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. குஜராத்தில் மணிஷ் சிசோடியாவுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் இருப்பதும், குஜராத்தில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதும் அவர்களுக்கு தெரியும்.
இந்த நோட்டீஸ் பா.ஜ.க.வின் விரக்தியின் அடையாளம். ஊழலுக்கான எந்த ஆதாரத்தையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை மட்டுமே பா.ஜ.க. துன்புறுத்துகிறது. இந்த நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி தலைவர்கள் அஞ்சவில்லை. உலகமே அறியும் கல்வி அமைச்சர்களை சிறையில் அடைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.