மகாராஷ்டிரா மற்றும் மராத்தி மக்கள் பிச்சைக்காரர்கள் என்று சொல்றாரு.. மாநில கவர்னரை குற்றம் சாட்டிய சஞ்சய் ரவுத்
மகாராஷ்டிரா மற்றும் மராத்தி மக்கள் பிச்சைக்காரர்கள் என்று சொல்கிறார் என மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி மீது சிவ சேனாவின் சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டினார்.
மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ ஒன்று அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி அந்த வீடியோவில், மகாராஷ்டிராவிலிருந்து குறிப்பாக மும்பை மற்றும் தானேவிலிருந்து குஜராத்திகளையும், ராஜஸ்தானியர்களையும் வெளியேற்றினால் இங்கு பணம் பணம் எதுவும் மிச்சமாகாது என்று நான் சில நேரங்களில் மக்களிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். இந்தியாவின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பை அதே நிலையில் தொடர முடியாது என தெரிவித்தார்.
பகத் சிங் கோஷ்யாரின் கருத்துக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா பிரிவு மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உத்தவ் தாக்கரே பிரிவு சிவ சேனாவின் சஞ்சய் ரவுத் இது தொடர்பாக டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், மகாராஷ்டிரா மற்றும் மராத்தி மக்கள் பிச்சைக்காரர்கள் என்று கவர்னர் குறிப்பிடுகிறார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, நீங்கள் அவரது பேச்சை கேட்கிறீர்களா? உங்கள் மகாராஷ்டிரா வேறு என்று. உங்களுக்கு சுயமரியாதை இருந்தால், கவர்னரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள். மராத்தி மக்களை விழித்தெழுங்கள் என பதிவு செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சச்சின் சாவந்த் கவர்னர் பேசிய வீடியோ டிவிட்டரில் ஷேர் செய்து, ஒரு மாநிலத்தின் கவர்னர் அந்த மாநில மக்களை அவதூறாக பேசுவது பயங்கரமானது. அவரது ஆட்சியின் போது, மகாராஷ்டிராவின் கவர்னரின் அமைப்பின் நிலை மற்றும் அரசியல் பாரம்பரியம் மோசமடைந்தது மட்டுமல்லாமல், மகாராஷ்டிரா தொடர்ந்து அவமரியாதைக்கு ஆளாகிறது என பதிவு செய்து இருந்தார்.