பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டதன் மூலம் பட்னாவிஸ் தனது அந்தஸ்தை தாழ்த்திக் கொண்டது துரதிர்ஷ்டவசமானது.. சஞ்சய் ரவுத்

 
நிலவில் எல்லா குடும்பத்துக்கும் பிளாட் என்பது மட்டும்தான் இல்லை-காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கலாய்த்த தேவேந்திர பட்னாவிஸ்

பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டதன் மூலம் தேவேந்திர பட்னாவிஸ் தனது அந்தஸ்தை  தாழ்த்திக் கொண்டது துரதிர்ஷ்டவசமானது என்று சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவின் துணை முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: உங்களுடன் அதிகாரத்தை அனுபவித்தவர்களும்,உங்களுடன் இருந்தவர்களும், உங்களோடு சேர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் நேரடியாக உங்கள் முதுகில் குத்தினால், அரசியலில் உயிரோடு இருக்க, அதை அவர்களிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும். இல்லையேல் நீடிக்க முடியாது. அரசியலில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். ஆனால் யாரோ ஒருவர் உங்களுக்கு நல்லவராக இருந்து உங்களை பயன்படுத்திக் கொண்டு உங்களுக்கு துரோகம் செய்தால், அத்தகையவர்களுக்கு அவர்களின் இடத்தை காட்ட வேண்டும். 

ஏக்நாத் ஷிண்டே

அவர்களுடைய இடத்தை காட்டினேன். மேலும் நான் என்னை பற்றி பெருமைப்படுகிறேன். நீங்கள் எனக்கு துரோகம் செய்தால் நான் பழி வாங்குவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். பட்னாவிஸ் பேசிய பழிவாங்கல், சிவ சேனாவில் பிளவை ஏற்படுத்தி, கிளர்ச்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக நியமித்ததுடன் ஒத்து வருவது போன்று தெரிகிறது. இந்நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் பழிவாங்குவேன் என்று கூறியதை சிவ சேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) பிரிவு தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ரவுத் விமர்சனம் செய்துள்ளார்.

சஞ்சய் ரவுத்

சஞ்சய் ரவுத் இது தொடர்பாக கூறியதாவது: மகாராஷ்டிராவில், பழிவாங்கும் உணர்வில் அரசியல் நடத்தப்படவில்லை. புதிய முன்னுதாரணங்கள் மற்றும் மரபுகள் அமைக்கப்பட்டால் அது மகாராஷ்டிராவின் கலாச்சாரத்திற்கு எதிரானது. அரசியல் கருத்து வேறுபாடு சகஜம். ஆனால் இன்றுவரை மகாராஷ்டிரா அரசியலில் பழிவாங்குதல் என்ற வார்த்தையை யாரும் பயன்படுத்தவில்லை. இது போன்ற அரசியலில் ஈடுபட்டதன் மூலம் தேவேந்திர பட்னாவிஸ் தனது அந்தஸ்தை  தாழ்த்திக் கொண்டது துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.