தாக்கரேவின் பெயரை சுயநல அரசியலுக்கு பயன்படுத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.. சஞ்சய் ரவுத் எச்சரிக்கை

 
அடுத்த 25 வருஷத்துக்கு சிவ சேனா தலைமையில்தான் ஆட்சி- சஞ்சய் ரவுத் உறுதி

பாலாசாகேப் தாக்கரேவின் பெயரை தங்கள் சுயநல அரசியலுக்கு பயன்படுத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் பிரிவுக்கு சஞ்சய் ரவுத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிவ சேனாவின் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான தீபக் கேசர்கர் கூறியதாவது: நாங்க்ள சிவசேனா பாலாசாஹேப் என்ற புதிய குழுவை அமைத்துள்ளோம். நாங்கள் இன்னும் சிவ  சேனாவில் இருக்கிறோம். நாங்கள் கட்சியை விட்டு வெளியேறி விட்டோம் என்று தவறான புரிதல் உள்ளது. நாங்கள் எங்கள் அணியை பிரித்துள்ளோம். நாங்கள் விரும்பிய பாதையில் செல்ல எங்களுக்கு 3ல் 2 பங்கு பெரும்பான்மை உள்ளது.  எங்கள் புதிய தலைவர் பெரும்பான்மையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அவர்களிடம் (உத்தவ் தாக்கரே பிரிவு) 16-17 எம்.எல்.ஏ.க்களுக்கு மேல் இல்லை.

தீபக் கேசர்கர்

இணைக்க வேண்டிய அவசியம் இல்லை, எங்கள் பிரிவுக்கு வேறு அங்கீகாரம் வழங்கப்படும், வேறு எந்த கட்சியுடனும் நாங்கள் இணையவில்லை. எங்கள் பிரிவுக்கு அங்கீகாரம் வழங்க  வேண்டும், வழங்கவில்லை என்றால் நீதிமன்றம் சென்று எங்கள் இருப்பையும், எண்ணிக்கையையும் நிரூபிப்போம். எங்களுக்கு எண்கள் (எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை) உள்ளன. ஆனால் முதல்வர் உத்தவ் தாக்கரேவை நாங்கள் மதிக்கிறோம், அவருக்கு எதிராக பேச மாட்டோம். சட்டப்பேரவை தேர்தில் எந்த வழியில் போராடினோமோ அந்த வழியில்தான் நாங்கள் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பால் தாக்கரே

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று சிவ சேனா தேசிய செயற்குழு கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் சிவ சேனா பவனை பயன்படுத்த முடியாது என்றும், பாலாசாகேப் தாக்கரே பெயரை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் முதல்வர் தாக்கரே பேசுகையில், சிலர் என்னிடம் ஏதாவது சொல்ல வேண்டும்  என்று கேட்கிறார்கள், ஆனால் அவர்கள் (கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள்) என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அவர்கள் விஷயங்களில் நான் தலையிட மாட்டேன் என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அவர்கள் தங்கள் சொந்த முடிவை எடுக்கலாம். ஆனால் யாரும் தாக்கரேயின் பெயரை பயன்படுத்தக் கூடாது. சஞ்சய் ரவுத் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாலாசாகேப் தாக்கரேவின் பெயரை தங்கள் சுயநல அரசியலுக்கு பயன்படுத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். வெளியேறியவர்கள் எங்கள் தேசபக்தர் பெயரை பயன்படுத்த முடியாது என தெரிவித்தார்.