ஹனுமன் கீர்த்தனைகளை பாட வேறொருவரின் வீட்டுக்குள் நுழைந்து அமைதியை கெடுக்க முயற்சிப்பது தவது.. சிவ சேனா

 
சிவ சேனா

ஹனுமன் கீர்த்தனைகளை கோஷமிடுவதற்காக வேறொருவரின் வீட்டுக்குள் நுழைந்து அமைதியை கெடுக்க முயற்சிப்பது தவறானது என பா.ஜ.க.வுக்கு சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் பதிலடி கொடுத்துள்ளார்.

அமராவதி மக்களை தொகுதி உறுப்பினர் நவ்னீத் ரானாவும், அவருடைய கணவரும், சுயேட்சை எம்.எல்.ஏ.வுமான ரவி ரானாவும், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பு ஹனுமன் கீர்த்தனைகள் பாட போவதாக தெரிவித்தனர். ஆனால் திட்டத்தை பின்னர் கைவிட்டு விட்டனர். இருப்பினும் அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு சகிப்புத்தன்மையற்றது. 

தேவேந்திர பட்னாவிஸ்

ரானா தம்பதியினர் ஹனுமன் கீர்த்தனைகளை படிக்க வேண்டும் என்றுதான் சொன்னார்கள். அவர்கள் (ரானா தம்பதி) முதல்வர் வீட்டின் போராட்டம் நடத்துவோம் என்றோ அல்லது வேறு எதுவும் சொல்லவில்லை. ஹனுமன் கீர்த்தனைகளை எங்கே படிக்க வேண்டும்? பாகிஸ்தானிலா? ஹனுமன் கீர்த்தனைகள் படிப்பது தேசவிரோதமா? அப்படியானால் நாங்களும் ஹனுமன் கீர்த்தனைகளை ஓதுவோம். அரசு எங்கள் மீது தேச துரோக வழக்கு போட வேண்டும் என தெரிவித்தார். தேவேந்திர பட்னாவிஸின் குற்றச்சாட்டுக்கு சிவ சேனா பதிலடி கொடுத்துள்ளது.

சஞ்சய் ரவுத்

சிவ சேனாவின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ரவுத் இது தொடர்பாக கூறுகையில், தேவேந்திர பட்னாவிஸ் பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறார். ஹனுமன் கீர்த்தனைகள் பாடியதற்காக யாரும் தண்டிக்கப்படுவதில்லை. யாரேனும் அதனை ஜபிக்க விரும்பினால், அவர்கள் அதை தங்கள் வீடுகளிலோ அல்லது கோயில்களிலோ செய்யலாம். ஹனுமன் கீர்த்தனைகளை கோஷமிடுவதற்காக வேறொருவரின் வீட்டுக்குள் நுழைந்து அமைதியை கெடுக்க முயற்சிப்பது தவறானது என தெரிவித்தார்.