சிசோடியாவுக்கு ஆதரவாக கட்சியினர் முழக்கம்.. ஆம் ஆத்மி கட்சி ஊழல் உலகக் கோப்பையை வென்றது போல் தெரிகிறது.. பா.ஜ.க. கிண்டல்

 
சம்பிட் பத்ரா

டெல்லியில் சாலைகளில் மணிஷ் சிசோடியாவுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சியினர் முழக்கமிட்டதை குறிப்பிட்டு, ஆம் ஆத்மி கட்சி ஊழல் உலகக் கோப்பையை வென்றது போல் தெரிகிறது என்று பா.ஜ.க.வின் சம்பிட் பத்ரா கிண்டல் செய்துள்ளார்.

டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக அக்டோபர் 17ம் தேதியன்று (நேற்று) சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி, டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மணிஷ் சிசோடியோவுக்கு சி.பி.ஐ. சில தினங்களுக்கு முன் சம்மன் அனுப்பியது. இதனையடுத்து மணிஷ் சிசோடியா விசாரணைக்காக சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்.

தொண்டர்கள் படை சூழ காரில் வந்த மணிஷ் சிசோடியா

முன்னதாக தலைநகரில் நேற்று மதுபானக் கொள்கை வழக்கில் விசாரணைக்காக சி.பி.ஐ. தலைமையகத்திற்கு மணிஷ் சிசோடியா செல்லும் வழியில்  ஆம் ஆத்மி கட்சி மாபெரும் பேரணியை நடத்தியது. மேலும் சாலையில் தொண்டர்களிடம் மணிஷ் சிசோடியா பேசினார். அப்போது, நான் சிறைக்கு சென்றால் வருத்தப்பட வேண்டாம் என்று தொண்டர்களிடம் மணிஷ் சிசோடியா கேட்டுக் கொண்டார்.

ஆம் ஆத்மி

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சியினர் சாலையில் எழுப்பிய முழக்கங்களை குறிப்பிட்டு அந்த கட்சியை பா.ஜ.க. கிண்டல் செய்துள்ளது. பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் சம்பிட் பத்ரா கூறுகையில், இன்று (நேற்று) மணிஷ் சிசோடியா தனது ஆதரவாளர்களுடன் தெருக்களில் திறந்த காரில் முழுக்கங்களை எழுப்பிய விதம், ஆம் ஆத்மி கட்சி ஊழல் உலகக் கோப்பையை வென்றது போல் தெரிகிறது என தெரிவித்தார்.