மோசடி நபர் சுகேஷ் சந்திரசேகரின் நல்ல நண்பர் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்.. பா.ஜ.க. தாக்கு

 
சுகேஷ் சந்திரசேகர்

மோசடி நபர் சுகேஷ் சந்திரசேகரின் நல்ல நண்பர் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் என்றும் ஆம் ஆத்மி கட்சி குண்டர்களின் கட்சி என்றும் பா.ஜ.க.வின் சம்பிட் பத்ரா குற்றம் சாட்டினார்.


பணமோசடி வழக்கில் டெல்லி திஹார் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் டெல்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு எழுதிய கடிதம் ஒன்று அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு சுகேஷ் சந்திரசேகர் எழுதியுள்ள கடிதத்தில்,  நான் 2017 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சத்யேந்தர் ஜெயினை 2015ம் ஆண்டில் இருந்து எனக்கு தெரியும். மேலும் தென் மண்டலத்தில் எனக்கு முக்கியமான பதவியை வழங்குவதாகவும், எனக்கு உதவுவதாகவும், விரிவாக்கத்தை தொடர்ந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள் என்று அவர் கூறிய வாக்குறுதியின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.50 கோடிக்கு மேல் நன்கொடை கொடுத்துள்ளேன்.

சத்யேந்தர்  ஜெயின்

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரை வாபஸ் பெறுமாறு சிறை மற்றும் சிறை நிர்வாகத்தின் இயக்குனர் ஜெனரல் மூலம் சத்யேந்தர் ஜெயின் என்னை மிரட்டுகிறார் என தெரிவித்து இருந்தார். மோசடி நபர் சுகேஷ் சந்திரசேகர் தனக்கும் டெல்லியின் முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கும் தொடர்பு உள்ளது என்று தெரிவித்துள்ளதை குறிப்பிட்டு ஆம் ஆத்மி கட்சியை பா.ஜ.க. கடுமையாக தாக்கியுள்ளது. பா.ஜ.க.வின் செய்திதொடர்பாளர் சம்பிட் பத்ரா இது தொடர்பாக கூறியதாவது: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், குற்றவாளி சுகேஷ் சந்திரசேகரின் நல்ல நண்பர். 2017ல் சத்யேந்தர் ஜெயின் சிறை அமைச்சராக இருந்தபோது, திகார் சிறையில் சுகேஷ் சந்திரசேகரை அடிக்கடி சந்தித்தார். 

சம்பிட் பத்ரா

சிறைக்குள் அடிப்படை வசதிகளுக்காக ஒவ்வொரு மாதமும் ரூ.2 கோடி பாதுகாப்பு பணம் செலுத்த வேண்டும் என்று மோசடி நபர் சுகேஷ் சந்திரசேகரிடம் சத்யேந்தர் ஜெயினின் செயலாளர் தெரிவித்தார். சுகேஷ் சந்திரசேகர் ஒரு மோசடி நபர் மற்றும் குற்ற சிண்டிகேட் நடத்தி வருகிறார். ஒருவர் சிறைக்குள் குற்ற சிண்டிகேட் நடத்துகிறார், ஆம் ஆத்மி அதை வெளியில் இருந்து நடத்துகிறது. சுகேஷ் சந்திரசேகர் ஒரு குண்டர், ஆம் ஆத்மி மகா குண்டர். ஆம் ஆத்மி ஒரு குண்டர் கட்சியாக உருவெடுத்துள்ளது. சில நாட்களுக்கு முன் அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின் பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர் என்று தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.