ஞானவாபி மசூதி விவகாரம்.. 2024 தேர்தலுக்காக மக்களின் உணர்வுகளை தூண்டும் தந்திரம்.. சமாஜ்வாடி எம்.பி. பேச்சு

 
சமாஜ்வாடி

ஞானவாபி மசூதியில் சிவ லிங்கம் இல்லை, இந்த விவகாரம் 2024 தேர்தலுக்காக மக்களின் உணர்வுகளை தூண்டும் தந்திரம் என மறைமுகமாக பா.ஜ.க.வை சமாஜ்வாடி எம்.பி. ஷபிகுர் ரஹ்மான் பார்க் தெரிவித்தார்.

உத்தர பிரதேசம் வாரணாசியில் ஞானவாபி மசூதியில், நீதிமன்ற உத்தரவின்பேரில் அண்மையில் வீடியோ வாயிலாக அளவிடும் பணி முடிவடைந்தது. ஞானவாபி மசூதியில் அளவிடும் பணியின் போது சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் முஸ்லிம் தரப்பினர் அது சிவலிங்கம் இல்லை நீரூற்று என்று தெரிவித்தனர். இந்நிலையில், ஞானவாபி விவகாரம் 2024 தேர்தலுக்காக உணர்வுகளை தூண்டுவதற்கான தந்திரம் என சமாஜ்வாடி எம்.பி. ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஞானவாபி மசூதி

சமாஜ்வாடி எம்.பி. ஷபிகுர் ரஹ்மான் பார்க் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: இந்த சூழ்நிலைகள் அனைத்தும் 2024 தேர்தல் காரணமாக உருவாக்கப்படுகின்றன. நீங்கள் வரலாற்றுக்குள் சென்றால் ஞானவாபி மசூதியில் சிவ லிங்கம் இல்லை, வேறு எதுவும் இல்லை. இதெல்லாம் தவறு. ராமர் கோயில் கட்டப்பட்டாலும், அங்கே மசூதி இருக்கிறது என்றுதான் சொல்கிறேன். இது முற்றிலும் அதிகாரத்தின் காட்சி.

ஷபிகுர் ரஹ்மான் பார்க்

நாங்கள் (முஸ்லிம்கள்) குறிவைக்கப்படுகின்றனர். மசூதிகள் தாக்கப்படுகின்றன. அரசாங்கம் இப்படி இயங்காது. அரசாங்கம் நேர்மையுடனும் சட்டத்தின் ஆட்சியுனடனும் இயங்க வேண்டும். ஆனால் சட்டத்தின் ஆட்சி அல்ல, புல்டோசர் ஆட்சி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அண்மையில் அசாதுதீன் ஓவைசி கூறுகையில், பாபர் மசூதியை முஸ்லிம்கள் ஏற்கனவே இழந்து விட்டார்கள் ஆனால் இன்னொரு மசூதியை இழக்க மாட்டார்கள் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.