பா.ஜ.க.வில் மதவெறியர்கள், கோழைகள், சந்தர்ப்பவாதிகள்..நான் அந்த கட்சியில் சேர மாட்டேன்...சல்மான் அனீஸ் சோஸ்

 
சல்மான் அனீஸ் சோஸ்

பா.ஜ.க.வில் நான் சேர மாட்டேன், அந்த கட்சியில் மதவெறியர்கள், கோழைகள், சந்தர்ப்பவாதிகள் என்று காங்கிரஸின் சல்மான் அனீஸ் சோஸ் அசாம் முதல்வருக்கு பதிலடி கொடுத்தார்.

அசாம் முதல்வரும், பா.ஜ.க.வின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவருமான ஹிமாந்தா பிஸ்வா சர்மா கடந்த சனிக்கிழமையன்று டிவிட்டரில், காங்கிரஸின் உள்கட்சி தேர்தல் எனப்படும் தேர்தலில், வாக்கு எண்ணிக்கை முன்பே முடிவு தெரிந்து அறிவிக்கப்பட்டது. சசி தரூருக்கு வாக்களித்து தைரியத்தை வெளிப்படுத்திய 1,000 பிரதிநிதிகள் மட்டுமே காங்கிரஸில் உள்ள ஒரே ஜனநாயக மக்கள். அவர்கள் விரைவில் பா.ஜ.க.வில் இணைவார்கள் என பதிவு செய்து இருந்தார்.

ஹிமாந்தா பிஸ்வா சர்மா

ஹிமாந்தா பிஸ்வா சர்மாவின் இந்த டிவிட், காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சசி தரூருக்கு வாக்களித்தவர்களில் ஒருவரான சல்மான் அனீஸ் சோஸ் தான் ஒருபோதும் பா.ஜ.க.வில் சேர மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சல்மான் அனீஸ் சோஸ் டிவிட்டரில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசி தரூருக்கு வாக்களித்த 1,072 பிரதிநிதிகளில் நானும் ஒருவன். நாங்கள் தோற்றோம் ஆனால் உள்கட்சி ஜனநாயகம் வென்றது.நாட்டில் பா.ஜ.க. மட்டுமே எஞ்சியிருந்தாலும் நான் அதில் சேர மாட்டேன். பா.ஜ.க.வுக்குள் பல மதவெறியர்கள், கோழைகள் மற்றும் சந்தர்ப்பவாதிகள் உள்ளனர். நான் ஒரு போதும் பா.ஜ.க.வில் சேர மாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

பா.ஜ.க.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் சசி தரூர், மல்லிகார்ஜூன் கார்கே இடையே இருமுனை போட்டி நிலவியது. இருப்பினும் மல்லிகார்ஜூன் கார்கே சுமார் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சசி தரூரை தோற்கடித்து காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ராகுல்  காந்தி செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மல்லிகார்ஜூன் கார்கே தான் காங்கிரஸின் புதிய தலைவர் என்பதை மறைமுகமாக தெரிவித்தார்.