சுபாஷ் சந்திரா பா.ஜ.க.வால் ஏமாற்றப்பட்டு போட்டியிடுகிறார், அவர் அவமானப்படுத்தப்படுவார்.. சச்சின் பைலட் உறுதி

 
எங்க கட்சியில் சேர விரும்பினால் விரிந்த கைகளுடன் வரவேற்போம்.. சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடுத்த பா.ஜ.க.

சுபாஷ் சந்திரா பா.ஜ.க.வால் ஏமாற்றப்பட்டு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார், அவர் அவமானப்படுத்தப்படுவார் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. சச்சின் பைலட் தெரிவித்தார்.

15 மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 57 உறுப்பினர்களின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ளது. மொத்தமுள்ள 57 இடங்களுக்கு வரும் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ராஜஸ்தானிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட  உள்ள 4 இடங்களும் அடங்கும். ராஜஸ்தானில் காங்கிரஸூக்கு 108 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால் 2 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி, மேலும் ஒரு இடத்தில் வெற்றி பெற வேண்டுமானால் மேலும் 15 வாக்குகள் தேவைப்படும். அதேசமயம், ராஜஸ்தானில் பா.ஜ.க.வுக்கு 71 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால், பா.ஜ.க. ஒரு இடத்தில் வெற்றி பெறுவது உறுதி. அதேசமயம் மேலும் ஒரு இடத்தில் வெற்றி பெற வேண்டுமானால் பா.ஜ.க.வுக்கு மேலும் 11 பேர் வாக்களிக்க வேண்டும். 

பா.ஜ.க.

ஜீ தலைவர் சுபாஷ் சந்திரா பா.ஜ.க. ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று சுபாஷ் சந்திரா செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கு 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவளிப்பார்கள். 2028 வரை சச்சின் பைலட்டால் முதல்வராக முடியாது. அவரது தந்தை எனது நண்பர். அவர் ஒரு இளம், பிரபலமான தலைவர் என்பதால் அவருக்கு இப்போது ஒரு வாய்ப்பு உள்ளது. அவர் இதை பழிவாங்கவோ அல்லது செய்தி அனுப்பவோ ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.

சுபாஷ் சந்திரா

சுபாஷ் சந்திரா பேசிய சில மணி நேரங்களில் சச்சின் பைலட் பதிலடி  கொடுத்தார். சச்சின் பைலட்  கூறியதாவது: அவர் பா.ஜ.க.வால் ஏமாற்றப்பட்டு போட்டியிடுகிறார். அவர் அவமானப்படுத்தப்படுவார். சுபாஷ் ஜி இது தொலைக்காட்சி தொடர் அல்லது பொழுதுபோக்கு அல்ல. இது தீவிரமான வணிகம். சந்திரா தனக்கு நான்கு வாக்குகள் கிடைக்கும் என்று சொன்னால், அவர்கள் யார் என்பதை அவர் சொல்ல வேண்டும். ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏ.வும் தங்கள் வாக்குகளை காட்ட வேண்டும். எனவே ஒரு கட்சி எம்.எல்.ஏ. மாற்றி வாக்களிப்பார் என்பதற்கான கேள்வியும் இல்லை. காங்கிரஸூம், சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் ஒன்றாகவே இருக்கிறார்கள். எங்களுக்கு தேவை 123 ஆனால் அதனை காட்டிலும் அதிகமாக உள்ளது. அவர் வலையில் யாரும் விழ மாட்டார்கள். அவர் விரக்தியில் இருக்கிறார். அவர் முன்பு வெற்றி பெற்றிருக்க முடியாது, அவர் வெற்றி பெறவும் முடியாது. காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.