செலவை குறைக்க நினைத்திருந்தால் பிரதமருக்காக வாங்கிய 2 விமானங்களை வாங்காமல் தவிர்த்திருக்கலாம்.. சச்சின் பைலட்

 
கோட்டா குழந்தைகள் இறப்பு…. முந்தைய பா.ஜ.க. அரசை குறை கூறுவதில் அர்த்தமில்லை… காங்கிரஸ் துணை முதல்வர் சச்சின் பைலட்

செலவை குறைக்க நினைத்திருந்தால் பிரதமருக்காக வாங்கிய 2 விமானங்களை வாங்காமல் தவிர்த்திருக்கலாம் என அக்னிபாத் திட்டம் தொடர்பாக மத்திய அரசை சச்சின் பைலட் விமர்சனம் செய்தார்.

இந்திய இளைஞர்களை ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணியமர்த்துவதற்கான மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் கடந்த 14ம் தேதி அறிவிக்கப்பட்டது. நம் நாட்டின் ராணுவ படை வீரர்களின் ஓய்வூதிய செலவினத்தை குறைக்கவும், பணியாளர்களின் சராசரி வயதை குறைக்கவும் இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அக்னிபாத் திட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. சில எதிர்பாளர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்

இந்நிலையில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராடத்தில் கலந்து கொண்ட ராஜஸ்தான் காங்கிரஸின் இளம் தலைவரும், அம்மாநில எம்.எல்.ஏ.வுமான சச்சின் பைலட் பேசுகையில் கூறியதாவது: அரசின் ஓய்வூதிய செலவினத்தை குறைக்க நினைத்தால், அதற்கு வேறு வழிகளும் இருந்தன. பிரதமருக்காக வாங்கிய இரண்டு விமானங்களை (வாங்காமல்) தவிர்த்திருக்கலாம். மத்திய அரசு சென்ட்ரல் விஸ்டாவை (புதிய நாடாளுமன்ற கட்டிட வளாகம்) கட்டக் கூடாது.

பிரதமர் மற்றும் உயர் இந்திய பிரதிநிதிகள் பயணம் செய்வதற்கான விமானம்

விவசாய சட்டங்களை மத்திய அரசு எப்படி அரசாங்கம் திரும்ப பெற்றதோ, அதேபோல அக்னிபாத் திட்டத்தையும் திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 2020ம் ஆண்டில், பிரதமர் மோடி மற்றும் பிற உயர் இந்திய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட பி777 விமானங்கள் இரண்டை போயிங் நிறுவனத்திடமிருந்து மத்திய அரசு வாங்கியது. இதன் மதிப்பு சுமார் ரூ.8,400 கோடி என கூறப்படுகிறது.