ஜனநாயகத்தை அழிக்க மேற்கொள்ளும் பா.ஜ.க.வின் முயற்சிகள் குறித்து மோடியிடம் பேசுங்க.. கட்கரியை வலியுறுத்தும் காங்கிரஸ்
ஜனநாயகத்தை அழிக்க மேற்கொள்ளும் பா.ஜ.க.வின் முயற்சிகள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது தலைவர் மோடியிடம் பேச வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ஜனநாயகம் இரண்டு சக்கரங்களில் இயங்குகிறது - ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி. ஜனநாயகத்திற்கு வலுவான எதிர்க்கட்சி தேவை. எனவே காங்கிரஸ் கட்சி மேலும் வலுப்பெற வேண்டும் என்பதே எனது மனப்பூர்வமான விருப்பம். மேலும் பலவீனமடைந்துள்ள நிலையில், அதன் இடத்தை பிராந்திய கட்சிகள் கைப்பற்றி வருகின்றன, இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. எனவே எதிர்க்கட்சி வலுவாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
காங்கிரஸ் வலுப்பெற வேண்டும் என பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி கூறியிருப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிரா காங்கிரஸின் பொதுச்செயலாளருமான சச்சின் சாவந்த் கூறியதாவது: நிதின் கட்கரி ஜி காட்டிய அக்கறையை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் மத்திய விசாரணை அமைப்புகளின் (சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை) பொறுப்புகளின் பொறுப்பை ஏற்று எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயகத்தை அழிக்க மேற்கொள்ளும் பா.ஜ.க.வின் முயற்சிகள் குறித்து அவர் (நிதின் கட்கரி) தனது தலைவர் மோடியிடம் பேச வேண்டும். உச்ச நீதிமன்றமும் உதவியற்றதாக தெரிகிறது.
பா.ஜ.க. அல்லாத கட்சிகளின் அரசாங்களை துன்புறுத்துவதற்கு விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகிறீர்கள். கடந்த 8 ஆண்டுகளாக நாட்டில் இடம் பெற்று வரும் அரசியல் முன்னெப்போதும் இல்லாதது. எதிர்க்கட்சியை அழிக்கும் பா.ஜ.க.வின் மனநிலை மற்றும் ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்றும் முயற்சி குறித்து அவர் மோடியுடன் பேசினால் அது ஜனநாயகத்துக்கும், நாட்டின் நலனுக்கும் நன்மை பயக்கும். கட்கரி வெளிப்படுத்திய உணர்வுகள் நன்றாக இருந்தாலும், நாட்டில் ஜனநாயகத்தை எப்படி குலைக்க மோடி அரசு முயற்சிக்கிறது என்பது அவருக்கு தெரியாமல் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.