இபிஎஸ் மீது நடவடிக்கை - சட்ட ஆலோசனை செய்யும் எஸ்.பி. ஸ்ரீ அபிநவ்

 
sp

 முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது, அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கொடுத்த புகார் குறித்து சட்ட ஆலோசனை கேட்டுள்ளோம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்.  இன்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

p

 கடந்த 14ஆம் தேதி அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி,  சேலம் மாவட்ட கண்காணிப்பாளர்  ஸ்ரீ அபிநவ்-ஐ நேரில் சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்து இருந்தார்.   அந்த புகார் மனுவில் ,  சேலம் மாவட்ட நிலவாரப்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது.   கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ,நிர்வாகிகள் ,ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி , தமிழகத்தை ஒரு முதல்வர் ஆட்சி செய்யவில்லை நான்கு முதல்வர்கள் ஆட்சி செய்கிறார்கள் .  அதாவது முதல்வர் மு.க. ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன், மனைவி துர்கா ஸ்டாலின் ஆகிய நான்கு பேரும் தான். அவர்கள் 4 முதல்வர்கள் ஆட்சி செய்வதால் எந்த திட்டமும் நிறைவேற்றப்படுவது இல்லை என்று பேசியிருக்கிறார்.  

sp

 எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சு ஜனநாயகத்திற்கு விரோதமானது.   இந்த பேச்சு தேர்தல் ஆணையத்தின் உரிமைகளுக்கு எதிரானது.   மக்களை திசை திருப்பி கிளர்ச்சியை உண்டாக்கும் விதத்தில் உள்நோக்கத்தோடு பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி . ஆகவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

 இந்த நிலையில் இன்று சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவரிடம் புகழேந்தியின் புகார் குறித்த கேள்விக்குத்தான்,  சட்ட ஆலோசனை கேட்டுள்ளோம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் .