உருட்டுக்கட்டைகள்.. ரத்தம் சொட்ட சொட்ட.. சத்தியமூர்த்தி பவன் கலவரம்

 
c

உருட்டு கட்டைகளுடன்  இரு தரப்பினரும் மோதிக் கொண்டதில் மூன்று பேருக்கு பயங்கர ரத்த காயம் ஏற்பட்டது . சென்னை காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இந்த கலவரம் நடந்தது. 

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகம் சத்தியமூர்த்தி பவனில் மாநிலத் தலைவர் கே. எஸ். அழகிரி தலைமையில் நேற்று  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் குண்டு ராவ்,  காங்கிரஸ் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர் . 

cc

இக்கூட்டத்திற்கு வந்த கே. எஸ். அழகிரி,  குண்டு ராவ் ஆகியோரை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.  நெல்லை காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரை உடனே நீக்க வேண்டும் என்றும்,  பணத்தை வாங்கிக் கொண்டு மாவட்ட புதிய நிர்வாகிகளை அவர் நியமித்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்கள். 

  மூத்த நிர்வாகிகள் கூட்டம் முடிந்ததும் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் உடன் பேச்சு  நடத்தப்படும் என்று சொல்லப்பட்டது.  ஆனால் கூட்டம் முடிந்து வெளியே வந்த அழகிரி பேச்சுவார்த்தை நடத்தாமல் காரில் புறப்பட்டார்.   


இதனால் ஆத்திரமடைந்த நெல்லை காங்கிரஸ் நிர்வாகிகள் அழகிரியின் காரை முற்றுகையிட,  மற்றொரு தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.  அதனை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடியாக  மாறியது.  உருட்டு கட்டைகளை வைத்து இருதரப்பினரும் அடிதடியில் இறங்கியதில் மூன்று பேருக்கு தலையில் பலத்த காயும் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. 

 போலீசார் வந்து அடிதடியில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.  இந்த கவலரத்தால்  காங்கிரஸ் சத்தியமூர்த்தி பவனில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

கலவரத்தில் சமாதானப்படுத்தி கூட்டத்தை விலக்க முயன்ற போது தொண்டர்கள் இருவரின் கன்னத்தில் அழகிரி பளார் என்று அறைந்துவிட்டார்.