தெலங்கானா அரசு, மத்திய மோடி அரசுடன் இணைந்து செயல்படுகிறது. அவர்கள் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.. காங்கிரஸ்

 
ரேவந்த் ரெட்டி

தெலங்கானாவின் பாரத ராஷ்டிரிய சமிதி அரசு, மத்திய மோடி அரசுடன் இணைந்து செயல்படுகிறது. அவர்கள் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது அரசாங்கத்துக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான பதிவுகள் பதிவு செய்ததாக குற்றச்சாட்டின் கீழ், கடந்த செவ்வாய்க்கிழமையன்று காங்கிரஸ் தேர்தல் வியூகவாதி சுனில் கனுகோலுவின் அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸின் ஊடக துறைத் தலைவர் பவன் கேரா செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: காவல் துறையினர் காங்கிரஸ் கட்சியின் வார் ரூமில் (வியூக அறை) சோதனை நடத்தியபோது குண்டர்கள் போல் செயல்பட்டனர். அலுவலகத்தில் இருந்து 50 கணினிகள் மற்றும் டேட்டாகளை எடுத்து சென்றனர். சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் தலைவர்களை போலீசார் கைது செய்தனர். 

கே.சந்திரசேகர் ராவ்

அவர்கள் (பாரத ராஷ்டிரிய சமிதி அரசு) தெலங்கானாவில் ஜனநாயகத்தை குலைத்து வருகின்றனர். கே.சந்திரசேகர் ராவுக்கும், மோடிக்கும் என்ன வித்தியாசம் உள்ளது?.டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பாக தனது மகளிடம் சி.பி.ஐ. விசாரணைக்கு வந்தபோது அவர்களிடம்  இருந்து பல்வேறு ஆவணங்களை கே.சந்திரசேகர் ராவ் கேட்டார். ஆனால்  அவரது போலீசார் எஃப்.ஐ.ஆர். அல்லது எந்த வாரண்ட் இல்லாமல் அலுவலகத்தை சோதனை செய்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். தெலங்கானா காங்கிரஸ் தலைவர்  ரேவந்த் ரெட்டி கூறியதாவது: பாரத ராஷ்டிரிய சமிதி அரசு, மத்திய மோடி அரசுடன் இணைந்து செயல்படுகிறது. அவர்கள் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள். அவரது கட்சியின் பெயரை மாற்றுவதற்கான பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை அதன் டி.என்.ஏ.வை மாற்றாது.

மோடி

தெலங்கானா மக்கள், மாநில அரசிடம் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளனர். முதல்வர் சந்திரசேகர் ராவ் ஊடகங்களை விலைக்கு வாங்கியதால், மாநில அரசின் தோல்விகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு சமூக ஊடகங்களை ஒரு ஊடகமாக காங்கிரஸ் பயன்படுத்துகிறது. எந்த நடைமுறையும் இல்லாமல், சீருடை அணியாதவர்கள் காங்கிரஸ் போர் நுழைந்து எங்கள் தரவைத் திருடி விட்டனர். தெலங்கானா காங்கிரஸின் வார் ரூம் சோதனை செய்யப்பட்ட விவகாரத்தை மாநில மக்களிடம் எடுத்துச் சென்று முதல்வருக்கு தகுந்த பதிலடி கொடுக்கும். இந்த விவகாரத்தை கட்சி நாடாளுமன்றத்திலும் எழுப்பும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.